கணினி

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்க இருப்பதாக அதானி குழுமம் அறிவிப்பு

Published On 2022-07-11 10:18 GMT   |   Update On 2022-07-11 11:44 GMT
  • வருகிற ஜூலை 26-ம் தேதி 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடைபெற உள்ளது.
  • இந்த ஏலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 20 ஆண்டு கால அளவிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்து 5ஜி சேவையை வழங்க முடியும்.

5ஜி தொலைதொடர்பு சேவை உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இந்தியாவில் தற்போது வரை, 4ஜி அலைக்கற்றை மூலம் இணைய சேவை மற்றும் தொலைதொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் 5ஜி சேவை எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் 2022 இறுதிக்குள் இந்தியாவில் 5ஜி சேவை நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், மத்திய அமைச்சரவை அண்மையில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியது.


வருகிற ஜூலை 26-ம் தேதி 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 20 ஆண்டு கால அளவிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்து 5ஜி சேவையை வழங்க முடியும்.

அந்த வகையில் இந்த ஏலத்தில் பங்கேற்க ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ள நிலையில், தற்போது அதானி குழுமமும் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்து உள்ளது. இதன்மூலம் 5ஜி அலைக்கற்றையை கைப்பற்ற கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 20 முதல் 25 முக்கிய நகரங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வர உள்ளது.

Tags:    

Similar News