கணினி

இந்தியாவில் உற்பத்தியாகும் ஏர்பாட்ஸ் பாகங்கள்

Update: 2023-01-30 09:12 GMT
  • ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது சாதனங்களை உற்பத்தி செய்யும் பணிகளை அதிகப்படுத்தி வருகிறது.
  • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் இருந்து ஆப்பிள் ஏற்றுமதி செய்த சாதனங்கள் மதிப்பு 1 பில்லியன் டாலர்களை எட்டியது.

ஆப்பிள் நிறுவன உற்பத்தியாளரான ஜெபில் இன்க், இந்தியாவில் ஏர்பாட்ஸ் பாகங்களை உற்பத்தி செய்ய துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிருந்து ஏர்பாட்ஸ்-க்கான பிளாஸ்டிக் பாடி அல்லது மூடிகளை சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாக தனியார் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்து இருக்கிறது.

ஏர்பாட்ஸ் பாகங்கள் உற்பத்தி குறித்து ஆப்பிள் மற்றும் ஜபில் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மெல்ல மாற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தியை 25 சதவீதம் வரை அதிகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தற்போது ஆப்பிள் நிறுவன சாதனங்களின் இந்திய உற்பத்தி 5 முதல் 7 சதவீதமாக உள்ளது. "ஆப்பிள், மற்றும் ஓர் வெற்றிக்கதை. அவர்களின் இந்திய உற்பத்தி ஏற்கனவே 5 முதல் 7 சதவீதமாக உள்ளது. நான் தவறாக கூறவில்லை எனில், அவர்கள் உற்பத்தியை 25 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளனர். அவர்களின் சமீபத்திய சாதனங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்." என மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்து இருக்கிறார்.

முன்னதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி அஸ்வினி வைஷ்னவ் இந்தியாவில் இருந்து ஆப்பிள் ஏற்றுமதி செய்யும் சாதனங்கள் மதிப்பு 1 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 141 கோடியாக அதிகரித்து இருக்கிறது என டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

Tags:    

Similar News