வழிபாடு

திருப்பதி பிரம்மோற்சவ விழா - 9 நாட்கள் நடைபெறும் சேவைகள்

Published On 2025-09-24 10:33 IST   |   Update On 2025-09-24 10:33:00 IST
  • பெரிய சேஷவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி மாடவீதிகளில் வலம் வருவார்.
  • 5-வது நாள் காலை மோகினி அவதார உற்சவம்.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருவோண (சிரவணம்) நட்சத்திரமும், நவராத்திரி கொண்டாட்டமும் இணைந்தே வரும். இச்சமயத்தில் திருமலையில் ஒரு பிரம்மோற்சவம் நடைபெறும்.

சில ஆண்டுகளில் புரட்டாசி மாதத்தில் இரண்டு திருவோண நட்சத்திர நாட்கள் வரும். அப்போது முதல் திருவோண நாளில் ஆகம முறைப்படி கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ பெருவிழா எடுப்பார்கள். பின்னர், இரண்டாவது திருவோண நாளில் 'லவுகீக' முறைப்படி நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும். இரண்டு உற்சவங்களும் சிரவண தீர்த்தவாரியுடன் (சக்கரஸ்நானம்) நிறைவடையும்.

பிரம்மோற்சவ விழாவின் முதல் நாள்: மாலை 6 மணிக்கு வேதகோஷங்கள் முழங்க, தங்கக் கொடிமரத்தில் கருடக்கொடி ஏற்றப்படும். இரவு பெரிய சேஷவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி மாடவீதிகளில் வலம் வருவார்.

2-வது நாள்: காலை- சின்ன சேஷவாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளுவார். இரவு- அம்ஸ (அன்னப்பறவை) வாகனத்தில் வெண்பட்டு அணிந்து, கைகளில் வீணையேந்தி பவனி வருவார்.

3-வது நாள்: காலை- பொன்மயமான சிம்மவாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி உலா வருவார். இரவு- முத்துப்பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி உலா வருவார்.

4-வது நாள்: காலை- கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா. இரவு- சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி வலம் வருவார்.

மோகினி அவதாரம்-கருட சேவை

5-வது நாள்: காலை மோகினி அவதார உற்சவம். அப்போது பெருமாள், அழகிய மங்கை வேடமேற்று உலா வருவார். இரவு கருடசேவை நடைபெறும். அப்போது ஏழுமலையான் கருட வாகனத்தில் அமர்ந்து மாடவீதிகளில் வீதிஉலா வருவார்.

6-வது நாள்: காலை- 'சிறிய திருவடி' என போற்றப்படும் அனுமந்த வாகனத்தில் மலையப்பசாமி, பச்சை பட்டாடை அணிந்து, தங்ககிரீடம் சூடி, கையில் வில்லேந்திய ராமப்பிரானாக வலம் வருகிறார். மாலை- தங்க ரதத்தில் ஸ்ரீதேவி, பூதேவியரோடு மலையப்பசாமி மாட வீதிகளில் உலா வருகிறார். இரவு கஜ வாகன வீதிஉலா நடக்கிறது.

7-வது நாள்: காலை- ஏழு குதிரைகள் இழுக்க தங்கமயமாக ஜொலிக்கும் சூரியபிரபை வாகனத்தில், மலையப்பசாமி மட்டும் எழுந்தருளுகிறார். இரவு- சந்திரபிரபை வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் மலையப்பர் சேவை சாதிக்கிறார்.

தேரோட்டம்

8-வது நாள்:- காலை தேரோட்டம். அதிகாலையிலேயே ஸ்ரீதேவி, பூதேவியரோடு மலையப்பசாமி தேரில் எழுந்தருளி பவனி வருவார். இரவு- குதிரை வாகனத்தில் எழுந்தருளி உலா வருகிறார்.

9-வது நாள்: கோவில் தெப்பக்குளமான புஷ்கரணியில் தீர்த்தவாரி (சக்கரஸ்நானம்) நடைபெறும்.

பின்னர் கொடியிறக்கம் (த்வஜாவரோகணம்) நடைபெற்று திருவிழா இனிதே நிறைவுபெறும்.

பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

பிரம்மோற்சவ விழா நேரத்தில் வி.ஐ.பி. தரிசனம் கிடையாது. பிரேக் தரிசன முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களின் வசதிக்காக ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு தினமும் 435 முறை பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் திருமலைக்கு அழைத்து வரப்பட்டு, மீண்டும் திருப்பதியில் கொண்டு விடப்படுவார்கள்.

திருப்பதியில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த 23 வாகன நிறுத்துமிடங்கள் தயாராக உள்ளன.

கோவிலின் நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் 2 லட்சம் பக்தர்கள் வரை அமர வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாடவீதிகளில் தரிசிக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக 35 அகண்ட ஒளித்திரைகள் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News