null
குழந்தை பாக்கியம் தரும் கடை ஞாயிறு திருவிழா
- மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது.
- ஹீரா நதி எனும் பாலாற்றில் நீராடிவிட்டு, பின்பு இக்கோவில் அருகில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வேண்டும்.
வேலூர் மாவட்டம் திருவிரிஞ்சிபுரத்தில் மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'கடை ஞாயிறு' திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி திறக்கப்படும் சிம்ம குளத்தில் நீராடி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரியவர்' என்ற போட்டி ஏற்பட்டபோது, சிவனின் அடியையோ, முடியையோ காண்பவர்களே பெரியவர் என்று சொல்லப்பட்டது. அப்போது பிரம்ம தேவர் சிவனின் முடியை கண்டதாக பொய் கூறினார். இதனால் சிவபெருமானிடம் சாபம் பெற்ற பிரம்ம தேவர், இத்தலத்தில் உள்ள மார்க்கபந்தீஸ்வரரை பூஜித்து சாப விமோசனம் பெற்றதாக இக்கோவில் தல வரலாறு கூறுகிறது.
இந்த ஆலயத்தில் உள்ள சிம்ம தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இக்குளத்தை ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. இந்த குளம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படுகிறது. அதாவது,
கார்த்திகை மாதம் நடைபெறும் கடை ஞாயிறு விழாவின் முந்தைய நாளான சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு இக்குளம் திறக்கப்படும்.
முதலில், ஹீரா நதி எனும் பாலாற்றில் நீராடிவிட்டு, பின்பு இக்கோவில் அருகில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வேண்டும். அதைத் தொடர்ந்து சிம்ம வாய் முகம் கொண்ட சிம்ம தீர்த்தத்தில் நீராடி, ஈர உடையுடன் மடியில் பூ, பழம், தேங்காய் வைத்துக்கொண்டு கோவில் பிரகாரத்தில் படுத்து உறங்குகிறார்கள். அப்போது அவர்கள் கனவில் சிவபெருமான் தோன்றி, பழம், பூ, பாலாடை கொடுத்து குழந்தை வரம் அருள்வார் என்பது நம்பிக்கை.
வேலூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலை என்ற இடத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.