null
பிரம்மதேவனால் நடத்தப்பட்ட திருப்பதி பிரம்மோற்சவம்
- லட்சுமி தேவியை பிரிந்த மகாவிஷ்ணு, பூலோகத்தில் சீனிவாசனாக அவதரித்தார்.
- திருமலையில் தேர்த்திருநாளன்று பெருமாளுடைய திருத்தேர் முன்பு பிரம்ம ரதம் இழுத்துச் செல்லப்படுகிறது.
பிரம்மோற்சவம்
திருமலையில் வேங்கடநாதனுக்கு, 'படைத்தல்' கடவுளான பிரம்மனே முன்னின்று நடத்திய விழாதான் 'பிரம்மோற்சவம்'.
புரட்டாசி மாதம் வரும் திருவோணம் நட்சத்திர நாளே, உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையானின் பிறந்தநாளாக கருதப்படுகிறது.
இந்த நாளுக்கு முன்பாக 9 நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாதான் 'பிரம்மோற்சவம்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதனை 'திருக்கொடி திருநாள்' என தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
இந்த விழா கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் குறித்து புராணங்களில் கூறப்படுவதாவது:-
பிரம்மோற்சவம் பிறந்த கதை
லட்சுமி தேவியை பிரிந்த மகாவிஷ்ணு, பூலோகத்தில் சீனிவாசனாக அவதரித்தார். அப்போது அவர், சேஷாசலம் என போற்றப்படும் திருமலையில் இருந்த ஒரு புற்றினுள் அமர்ந்து தவம் செய்தார். அப்போது முனிவர்களுக்கும், மக்களுக்கும் அரக்கர்கள் பெருந்துன்பம் செய்து வந்தனர்.
இதனால் துயருற்ற முனிவர்கள், புற்றினுள் தவம் இருந்த திருமாலை சந்தித்து தங்கள் குறை தீர்க்க வேண்டினர். இதைக்கேட்ட திருமால், அந்த அரக்கர்களை அழித்து வருமாறு, தமது கையில் இருந்த சக்கரத்தாழ்வாரான சுதர்சனருக்கு கட்டளையிட்டார்.
அவரும், வீரபுருஷனாக உருக்கொண்டு 4 திசைகளுக்கும் பறந்து சென்று எல்லா அரக்கர்களையும் அழித்து வெற்றிக்கொண்டார்.
பின்னர், திருமால் முன்னால் வந்து நின்ற சுதர்சனருக்கு, பரிசளிக்க விரும்பிய பெருமாள், உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.
பிரம்ம ரதம்
உடனே சுதர்சனர், "பகவானே, தாங்கள் வீற்றிருக்கும் இத்திருத்தலத்தில் தங்களுக்கு பெரியதொரு உற்சவம் நடத்தி காண விரும்புகிறேன்" என்று வேண்டினார்.
தனக்கென எதுவும் கேட்காத சுதர்சனரின் வேண்டுகோளுக்கு திருமால் இணங்க, பிரம்மதேவர் உரிய ஏற்பாடுகளைச் செய்தார். ஒரு புரட்டாசி மாதத்தில், சுதர்சனரின் வேண்டுகோளின்படி பிரம்மதேவனால் திருமலையில் கோலாகலமாக உற்சவம் நடத்தப்பட்டது. அன்று முதல் திருமலையில் பிரம்மோற்சவம் நடந்து வருவதாக அந்த கதை கூறுகிறது.
அதனால்தான், இன்றளவும் திருமலையில் தேர்த்திருநாளன்று பெருமாளுடைய திருத்தேர் முன்பு பிரம்ம ரதம் இழுத்துச் செல்லப்படுகிறது.
அதேபோல பிரம்மோற்சவ விழா நாட்களில் நடைபெறும் வாகனசேவைகளின்போது, சக்கரத்தாழ்வார் முன்னே செல்வது வழக்கமாக இருக்கிறது.
9 நாட்கள் உற்சவம்
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருவோண (சிரவணம்) நட்சத்திரமும், நவராத்திரி கொண்டாட்டமும் இணைந்தே வரும். இச்சமயத்தில் திருமலையில் ஒரு பிரம்மோற்சவம் நடைபெறும்.
சில ஆண்டுகளில் புரட்டாசி மாதத்தில் இரண்டு திருவோண நட்சத்திர நாட்கள் வரும். அப்போது முதல் திருவோண நாளில் ஆகம முறைப்படி கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ பெருவிழா எடுப்பார்கள். பின்னர், இரண்டாவது திருவோண நாளில் 'லவுகீக' முறைப்படி நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும். இரண்டு உற்சவங்களும் சிரவண தீர்த்தவாரியுடன் (சக்கரஸ்நானம்) நிறைவடையும்.
பிரம்மோற்சவம் நடைபெறும் முந்தைய நாள் ஏழுமலையான் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வாசனை திரவியங்கள் பூசப்படும். தொடர்ந்து, ஏழுமலையானின் சேனாதிபதியாக கருதப்படும் விஸ்வசேனருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்த ஆண்டு இன்று 24-ந்தேதி (புதன்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வரும் உற்சவரான மலையப்ப சாமியை காண, கண்கள் கோடி வேண்டும்.
ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின்போது, திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக கருடசேவை, தங்கத் தேரோட்டம், தீர்த்தவாரி ஆகியவை நடைபெறும் நாட்களில், மலையா... பக்தர்களின் தலையா எனும் அளவுக்கு திருமலையே கோலாகலமாக இருக்கும்.