முன்னோர்களின் ஆசியை வழங்கும் தை அமாவாசை
- ஒருவர் இறந்த பிறகு, அவரது ஆன்மா உடலில் இருந்து பிரிந்து முன்னோர்களின் உலகமான பித்ருலோகத்தை சென்றடையும்.
- முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகள், பழங்கள் போன்றவற்றை படையல் இட்டு வழிபடலாம்.
இந்து மதத்தில், அமாவாசை தினம் என்பது மிகவும் 'முக்கியத்துவம் வாய்ந்தது. முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த நாளாக அமாவாசை கருதப்படுகிறது. முன்னோர்களை வழிபடுவதற்கு அனைத்து மாதங்களில் வரும் அமாவாசையும் முக்கியமானது என்றாலும், தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
மாதந்தோறும் வரும் அமாவாசைகளில் விரதம் இருந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தவறி இருந்தாலும், இந்த மூன்று அமாவாசைகளில் கண்டிப்பாக முன்னோர் வழிபாட்டை முறையாக மேற்கொள்ள வேண்டும். அதிலும் தை அமாவாசைக்கு, மற்ற இரண்டு அமாவாசைகளை காட்டிலும் கூடுதல் சிறப்பு உண்டு.
தமிழ் மாதங்களில் பத்தாவதாக தை மாதம் வருகிறது. இந்த மாதத்தில் வரும் தை அமாவாசையானது, தை தொடங்கி ஆனி மாதம் வரையிலான உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசையாகும். முன்னோர்களின் சாபங்கள், தோஷங்கள் போன்றவற்றில் இருந்து விடுபடுவதற்கும், நம்முடைய தலைமுறை துன்பம் இல்லாத வாழ்க்கையை பெறுவதற்கும், முன்னோர்களின் ஆசியை பெறுவதற்கும் ஏற்ற நாளாக தை அமாவாசை உள்ளது. தை அமாவாசை தினத்தில் புனித நதியில் நீராடுவதும், வழிபாடுகளை மேற்கொள்வதும், தான தர்மங்கள் செய்வதும் சிறந்த பலன்களை தரும்.
ஒருவர் இறந்த பிறகு, அவரது ஆன்மா உடலில் இருந்து பிரிந்து முன்னோர்களின் உலகமான பித்ருலோகத்தை சென்றடையும். அவர்களின் கர்ம வினைக்கு ஏற்ப அடுத்த பிறவி எடுக்கும் வரை ஆன்மா அங்கேயே தங்கி இருக்கும். பித்ருலோகத்தில் இருக்கும்போது, ஆன்மாவுக்கு பசி, தாகம் ஏற்பட்டால், அவர்கள் முந்தைய வாழ்விடமான பூமிக்கு வருவார்கள். அப்போது இங்கு இருக்கும் அவர்களது சந்ததியினர், முறையாக மந்திரங்களை உச்சரித்து, சடங்குகளை செய்து, தண்ணீர், எள் ஆகியவற்றை தெளித்து தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்களுக்கு தேவையான உணவும், தண்ணீரும் கிடைத்து, பசி நீங்கப் பெறுவார்கள். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து, தங்க ளது சந்ததியினரை வாழ்த்தி செல்வதாக நம்பிக்கை.
ஆடி அமாவாசை அன்று நமது முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு புறப்பட்டு வருவார்கள். புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையில் நாம் படைக்கும் உணவுகளையும், தர்ப்பணங்களையும் ஏற்றுக் கொள்வார்கள். பின்னர், தை அமாவாசையில் மீண்டும் பித்ருலோகத்திற்கு புறப்பட்டு செல்வதாக ஐதீகம்.
அதன்படி, தை அமாவாசை அன்று பித்ருலோகத்துக்கு புறப்படும் முன்னோர்களுக்கு தாகம் அதிகமாக இருக்கும். அதனால், அன்றைய தினம் புனித நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு எள், தண்ணீர் தெளித்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு, நமக்கும், நமது சந்ததியினருக்கும் ஆசி வழங்குவார்கள்.
இந்த ஆண்டு தை அமாவாசை 18-1-2026 ஞாயிற்றுக்கிழமை நாளை வருகிறது. அன்றைய தினம் காசி, கயா, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் போன்ற புனித தீர்த்தங்களில் தர்ப்பணம் கொடுத்து சூரிய பகவானை வழிபட வேண்டும். முடியாதவர்கள், வீட்டின் அருகே உள்ள புனித நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்து வழிபடலாம். பின்னர், வீட்டில் முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, அதற்கு சந்தனம், குங்குமம் அணிவித்து, பூமாலை சாற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகள், பழங்கள் போன்றவற்றை படையல் இட்டு வழிபடலாம். முன்னோர்கள் காகத்தின் வடிவில் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். எனவே, அன்றைய தினம் காகத்துக்கு உணவு அளிப்பது அவசியம்.
தை அமாவாசை தினத்தில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதில் கலந்துகொண்டு இறைவனை மனதார வழிபட வேண்டும். தை அமாவாசையில் முன்னோர் வழிபாடு செய்வதன் மூலம், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும், நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம், முன்னோர்களின் ஆசியுடன் வீட்டில் நல்ல பலன்கள் ஏற்படும் என்பது நம்பிக்கை.