null
கிறிஸ்துமஸ் குடில் உருவான வரலாறு
- கிறிஸ்துமஸ் குடிலை முதன்முதலாக உருவாக்கியவர் புனித பிரான்சிஸ் அசிசியார்.
- 7ம் நூற்றாண்டிலிருந்தே இயேசுவின் குடிலைத் தாங்கிய அன்னை மரியின் ஆலயம் என்றழைக்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் குடிலை முதன்முதலாக உருவாக்கியவர் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆவார். புனித பிரான்சிஸ் அசிசியார் இக்குடிலை கி.பி. 1223ஆம் ஆண்டு கிரேஜ்ஜோ என்கிற இடத்தில் இருந்த துறவற மடத்தின் அருகில் இருந்த ஒரு வனப்பகுதியில் அமைந்திருந்த குகையில், செல்வந்தரான ஜியோவான்னி வெலிதா என்பவரின் உதவியுடன் அமைத்தார்.
ஆனாலும் இயேசுவின் பிறப்பு நிகழ்வு காட்சிகள் திருஉருவங்களாக கி.பி. 1283-ம் ஆண்டு பிரான்சிஸ்கன் துறவற சபையைச் சார்ந்த முதல் திருத்தந்தை நான்காம் நிக்கோலாஸ் முன்முயற்சியால், டஸ்கன் பகுதியைச் சார்ந்த புகழ்பெற்ற சிற்ப கலைஞர் காம்பியோ நகர் அர்னோல்போவால் வடிவமைக்கப்பட்டு, மேற்கத்திய பெத்லகேம் என்றழைக்கப்பட்ட புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் வைக்கப்பட்டது.
இந்த பெருங்கோவிலானது 7ம் நூற்றாண்டிலிருந்தே இயேசுவின் குடிலைத் தாங்கிய அன்னை மரியின் ஆலயம் என்றழைக்கப்பட்டது. ஏனென்றால், இங்குதான் இயேசுவைத் தாங்கிய தீவனத் தொட்டியின் ஒரு பகுதியானது வைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் மரம்
கிறிஸ்துமஸ் மரத்துக்கு என வரலாறு உள்ளது. கிறிஸ்துமஸ் மரம், இயேசு நாதரின் முப்பரிமாணங்களாகிய, தந்தை, மகன் மற்றும் தூய ஆவி ஆகியவைகளைக் காட்டுவதாக கூறப்படுகிறது. 10-ம் நூற்றாண்டில், ஜெர்மனியில் வாழ்ந்த புனித போனிபேஸ் என்கிற பாதிரியார் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்கையில், ஒரு ஊரில், மக்கள் ஓக் மரத்தை வணங்குவதைக் கண்டு கோபமுற்று, வேர்ப்பகுதியுடன் அதை அடியோடு வெட்டி விட்டுச் சென்றார்.
சில நாட்களில் வெட்டப்பட்ட அந்த மரம் அதே இடத்தில் வளர்ந்து கம்பீரமாக நிற்க, இயேசு நாதரே மீண்டு வந்ததின் அடையாளமாக எண்ணி ஊர் மக்கள் வணங்கினர். சில மாதங்கள் சென்றபின், புனித போனிபேஸ் பாதிரியார் அங்கே வருகையில், அந்த புதிய மரத்தை அதே இடத்தில் கண்டு அதிசயப்பட்டார். அங்கேயே மண்டியிட்டு அமர்ந்து ஜெபிக்க ஆரம்பித்தார். 15-ம் நூற்றாண்டில், ஜெர்மானியப் பாதிரியார், தேவாலய காம்பவுண்டினுள் இருந்த 'பிர்' மரத்தை மெழுகுவர்த்தி ஏற்றிய கூண்டு விளக்குகளால் அலங்கரித்தார். எவர்கிரீன் மரமென 'பிர்' மரம் அழைக்கப்பட்டது. பின்னர் ஓக் மற்றும் பிர் மரங்கள் கிறிஸ்துமஸ் மரங்களாக உபயோகப்படுத்தப்பட்டன.