வழிபாடு

உள்ளங்களில் ஒளியேற்றி வழிகாட்டும் தீபங்களின் திருவிழா

Published On 2025-10-18 10:36 IST   |   Update On 2025-10-18 10:36:00 IST
  • தீபாவளிக்கு முந்திய நாள் வீட்டில் லட்சுமி குபேர பூஜை செய்வதன் மூலம் செல்வ வளம் ஏற்படும்.
  • பிரிந்த குடும்பங்கள், மனங்கள் ஒன்று சேர்வதற்கும் தீபாவளி பண்டிகை பெரும் உதவியாக அமைகிறது.

தீபாவளி என்றால் அதற்கு விளக்குகளின் வரிசை என்று பொருளாகும். தமிழகத்தில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் வரும் அமாவாசை தினத்தன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. அந்த நாளன்று அதிகாலையில் பூஜை அறையில் 5, 9, 11 ஆகிய எண்ணிக்கைகளில் வரிசையாக தீபம் ஏற்றி வைத்து கடவுளை வழிபடுவது மரபாக கடைபிடிக்கப்படுகிறது.

அன்று மாலை வீட்டின் முன்னால் குறைந்தபட்சம் இரு அகல் விளக்குகளாவது ஏற்றி வைப்பதும் ஐதீகமாகும். மற்ற நாட்களை விட தீபாவளி நாளில் தான் செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி, வைத்திய கடவுளான தன்வந்திரி, மனித ஆயுளுடன் தொடர்பு கொண்ட எமதர்மன் ஆகியோர் ஆசிகளை வழிபாட்டின் மூலம் பெற முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனர்.

மேலும், தீபாவளி அன்று எல்லா தேவதைகளும் பண்டிகை பொருட்களில் வாசம் செய்வதாகவும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. தலைக்கு தேய்த்துக் குளிக்கும் நல்லெண்ணையில் மகாலட்சுமியும், அரப்பு அல்லது சிகைக்காய் தூளில் சரஸ்வதி தேவியும், நெற்றியில் இடும் சந்தனத்தில் பூமாதேவியும், குங்குமத்தில் கௌரியும், பூக்களில் மோகினி, தண்ணீரில் கங்கையும், நாம் அணியும் புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு பலகாரங்களில் அமிர்தமும், தீபச்சுடரில் பரமாத்மாவும் இருப்பதாகவும் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கமாக தீபாவளியன்று அதிகாலையில் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பது வழக்கம். அதன் மூலம் நம்மிடம் உள்ள தீமைகள் அழிந்து, நல்லவை வந்து சேரும் என்பது நம்பிக்கையாகும். அவ்வாறு குளிக்கும் தண்ணீரில் அன்று ஒரு நாள் காலையில் மட்டும் கங்கை இருப்பதாக ஐதீகம். எனவே, அதில் சிறிது பசும்பால் கலந்து குளிப்பதும் மகாலட்சுமியின் அருளை பெற்றுத் தரும்.

 

தீபாவளிக்கு முந்திய நாள் வீட்டில் லட்சுமி குபேர பூஜை செய்வதன் மூலம் செல்வ வளம் ஏற்படும். அந்த பூஜையில் ஐந்து விதமான பழ வகைகள் மற்றும் மூன்று விதமான பூக்களை படைப்பது விசேஷம். பழ வகைகளில் மாதுளை, செவ்வாழை, நெல்லிக்கனி ஆகியவை முக்கியம். பூ வகைகளில் தாமரை, மல்லிகை, செவ்வந்தி ஆகியவை சிறப்பிடம் பெறுகின்றன. அவ்வாறு லட்சுமி குபேர பூஜை செய்த பிறகு வீட்டில் உள்ள பெரியோர்களிடம் ஆசிர்வாதம் பெறுவதன் மூலம் சகல மங்களமும் நிலைக்கும் என்ற ஐதீகம் ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தீபாவளி நாளன்று வீட்டில் கரும்பு வைத்து மகாலட்சுமியை வழிபாடு செய்வதும் வட இந்திய மாநிலங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. அதன் மூலம் அவர்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுவதாக நம்புகிறார்கள். அத்துடன் வீட்டின் தலைவாசல், கதவு நிலைகள் ஆகியவற்றுக்கு சாமந்திப்பூக்களை கொண்டு வித விதமாக அலங்காரங்கள் செய்கிறார்கள்.

அத்துடன், அன்று மாலை நேரம் செல்வத்தின் கடவுளான மகாலட்சுமியை வரவேற்கும் விதமாக வீட்டு வாசலில் இருபுறமும் அகல் விளக்குகளை ஏற்றி வைக்கிறார்கள். தீபாவளி தினத்தன்று பட்டாசுகளை வெடித்து கொண்டாடும் முறையிலும் ஒரு உள்ளர்த்தம் இருக்கிறது. அதாவது இருள் விலகி ஒளி பெருகுவது, தீமை விலகி நன்மையின் வெளிச்சம் ஏற்படுவது என்ற அர்த்தத்தில் மக்கள் விளக்கேற்றுவதுடன், பட்டாசுகளை வெடித்து தீபாவளி கொண்டாடுகிறார்கள்.

அத்துடன் மகிழ்ச்சியை ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் தெரிவித்துக் கொள்ளும் வகையில் இனிப்புகளை வழங்கியும், புத்தாடைகளை அணிந்தும், அவற்றை பரிசுகளாக வழங்கியும் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள்.

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தீபாவளி நன்னாள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றாலும், இன்னொரு முக்கியமான சடங்கும் அதன் கொண்டாட்டத்தில் அடங்கியிருக்கிறது. அதாவது, ஏதேனும் ஒரு காரணத்திற்காக குடும்பங்களில் ஒருவரோடு ஒருவர் பேசாமல், தொடர்பு கொள்ளாமல் இருந்தால் தீபாவளி நாளை முன்னிட்டு அவர்கள் ஒன்று சேர்வதற்கு உறவினர்கள் முயற்சிப்பார்கள்.

அந்த வகையில், பிரிந்த குடும்பங்கள், மனங்கள் ஒன்று சேர்வதற்கும் தீபாவளி பண்டிகை பெரும் உதவியாக அமைகிறது. அவ்வாறு இணைந்த குடும்பங்களில் இரவு முழுவதும் சுடர் விடும்படி மாணிக்க தீபம் என்ற அகண்ட தீபத்தை ஏற்றி வைப்பார்கள். அதன் மூலம் அவரவர் குலதெய்வம் மற்றும் மகாலட்சுமியின் அருள் கிடைப்பதாக பொதுமக்களிடையே ஒரு பாரம்பரியம் உள்ளது.

Tags:    

Similar News