ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா: ஆழியாற்றங்கரையில் நள்ளிரவு மயான பூஜை
- மயான பூஜையையொட்டி இன்று காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
- 3-ந்தேதி காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள்.
கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் அதிகளவிலான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
குறிப்பாக அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் குண்டம் திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொட ங்கியது. அதனை தொடர்ந்து தினமும் மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை இன்று நள்ளிரவு 1 மணிக்கு ஆழியாற்றங்கரை மயானத்தில் நடக்க உள்ளது. இதற்காக மயான பூஜை நடைபெறும் பகுதி சுத்தம் செய்யப்படுகிறது. மக்கள் அமர்ந்து மயான பூஜையை பார்ப்பதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மயான பூஜையையொட்டி இன்று காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
நள்ளிரவில் மயான பூஜை நடைபெறும் ஆழியாற்றங்கரையில் மாலை முதலே பக்தர்கள் குவிய தொடங்கினர். அவர்கள் அங்கு அமர்ந்து இருந்து நள்ளிரவில் நடைபெறும் மயான பூஜையை பார்க்க உள்ளனர். இதனையொட்டி அங்கு ஆனைமலை போலீசார் தீவிர பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
மயான பூஜையை தொட ர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகா பூஜை, 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
அன்று மாலை 6.30 மணிக்கு சித்திரைத் தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது.
3-ந்தேதி காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். 4-ந் தேதி காலை 6.30 மணிக்கு மேல் 7.30க்குள் கொடி இறக்குதல், காலை 10 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜை ஆகியவை நடக்கிறது. 5-ந்தேதி காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவடைகிறது.