வழிபாடு

weekly rasipalan 01.2.2026 to 07.2.2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்

Published On 2026-02-01 10:30 IST   |   Update On 2026-02-01 10:30:00 IST
  • ரிஷபம் தன்னம்பிக்கை உயரும் வாரம்.
  • மிதுனம் பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும் வாரம்.

மேஷம்

மாற்றங்களை சந்திக்கும் வாரம். உச்சம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் தனது 4-ம் பார்வையால் தன் வீட்டை தானே பார்க்கிறார். செவ்வாயின் நான்காம் பார்வைக்கு சொத்துக்களை வழங்கக்கூடிய சக்தி உண்டு. இதுவரை வீடு நில புலம் இல்லாதவர்களுக்கு புதிய சொத்துக்கள் சேரும். பழைய சொத்துக்களின் மதிப்பு உயரும். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். ஏழரைச் சனி துவங்கினாலும் குருவின் பார்வை பாக்கிய ஸ்தானத்திற்கு இருப்பதால் எப்பொழுதும் உழைத்துக் கொண்டே இருக்கும் ஆர்வம் மிகுதியாகும்.

துணிந்து சில முடிவுகளை எடுத்து முன்னேறுவீர்கள். தொழில் உத்தியோக நிமித்தமாக அடிக்கடி பிரயாணம் செய்ய நேரும். நிரந்தரமான நிலையான வருமானம் உண்டாகும். சேமிப்புகள் உயரும். மனைவி மூலம் செல்வாக்கு உயரும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. திருமண தடைகள் நீங்கி வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். சுப நிகழ்ச்சிகளால் அலைச்சல் அதிகமாகும். முருகன் வழிபாட்டால் முத்தாய்ப்பான முன்னேற்றங்களை அடைய முடியும்.

ரிஷபம்

தன்னம்பிக்கை உயரும் வாரம். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சுக்கிரன் வார இறுதியில் பத்தாம் இடமான தொழில் ஸ்தானம் சென்று ராகுவுடன் இணைந்து குரு பார்வை பெறுகிறார். பெரிய முதலீடுகளை பயன்படுத்தி தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டமிடுவீர்கள். கடின உழைப்பை வெளிப்படுத்துவீர்கள். வீடு, மனை, பூமி தொடர்பான நெடுநாள் கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும். சிலருக்கு உஷ்ணம் சார்ந்த பிரச்சிினைகளும் ஜீரணக் கோளாறுகளும் ஏற்படும்.

இன்னல்களை எதிர்கொள்ளும் மனோதிடம் உருவாகும். கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். புத்திர பிராப்த்தம் உண்டாகும். உயர்கல்வி முயற்சி வெற்றி தரும். பெரிய மனிதர்களின் ஆதரவில் கவுரவப் பதவி கிடைக்கும். சமுதாயத்தில் செல்வாக்கு உயரும். பெண்களுக்கு கணவர் மற்றும் புகுந்த வீட்டாரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனிற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றிதரும்.ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபடவும்.

மிதுனம்

பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு சென்று ராகுவுடன் இணைந்து குரு பார்வை பெறுகிறார். தெளிவான முடிவு எடுக்கும் தன்மையும் ஞாபக சக்தியும் கூடும். குடும்பத்தில் நிலவிய பிணக்குகள் நீங்கும். புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் உருவாகும். பொறுப்புகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் ஏற்பட்ட அவப்பெயர் விலகும். பெண்களுக்கு சிறு தொழில், சுய தொழில் செய்யும் ஆர்வம் அதிகமாகும். விண்ணப்பித்த அரசு வேலை கிடைக்கும். மறைமுக வருமானம் பெருகும். வாடகை வீட்டில் வாழ்ந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறுவார்கள்.

கடந்த கால வம்பு வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும். பிள்ளைகளின் திருமணத்திற்கு சீர்வரிசைகள் வாங்குவீர்கள். யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. பெரிய பண பரிவர்த்தனைக்கான முக்கிய ஆவணங்களை கவனமாக வைத்திருக்க வேண்டும். நோயால் கடனால் ஏற்பட்ட கவலைகள் குறையும். ஆயுள் பலம் உண்டு. முருகனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபடவும்.

கடகம்

நம்பிக்கை அதிகரிக்கும் வாரம். ராசியை ஏக யோகாதிபதி செவ்வாய் பார்ப்பது சந்திரமங்கள யோகமாகும். தெளிவான சிந்தனைகள் பிறக்கும். வாழ்வில் முக்கியமான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் வெற்றியை உறுதி செய்வீர்கள். பணத்தேவைகள் நிறைவேறும். சில குழப்பங்களுக்கு முடிவு கிடைக்கும். சொத்து விற்பனையில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் உண்டாகும். பூர்வீகத்தில் புதிய அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டு. விவசாயிகளுக்கு அரசு வகை ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கை துணைக்கு வட்டியில்லா கடன் கிடைக்கும்.

பங்குச்சந்தை இழப்புகள் குறையும். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. தொழில் தொடர்பான முயற்சிக்கு தந்தையின் ஆதரவு கிடைக்கும். இதுவரை இருந்து வந்த சகோதர, சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு அரசியல் ஆசை துளிர் விடும். திருமணத் தடை அகலும். பார்த்துச் சென்ற வரனிடமிருந்து நல்ல தகவல் கிடைக்கும். அஷ்டம ராகுவால் சிலருக்கு விபரீத ராஜயோகம் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. அமைதியாக இருப்பது அவசியம். விபூதி அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

சிம்மம்

சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் 4,9-ம் அதிபதி செவ்வாயுடன் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். பெரியளவு முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் பணம் பொருள் இவற்றிற்கு ஜாமீன் போடக்கூடாது. பங்குச் சந்தை முதலீடுகளில் மிகவும் கவனம் தேவை. பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளை ஒத்தி வைக்கவும். கடன்கள் மற்றும் மீது கவனம் தேவை. தொழில் மற்றும் குடும்ப ரகசியங்களை வெளி நபர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். தொழில் ரீதியான முன்னேற்றமும் இருக்கும்.

தர்ம காரியங்கள் செய்து மகிழ்வீர்கள். அஷ்டமச் சனியின் காலம் என்பதால் எதைச் செய்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யவும். கோட்ச்சார கிரகங்கள் சுமாராக இருந்தாலும் வாழும் கலையை உணர்ந்த உங்களை எந்த வினையும் பாதிக்காது. திருமணத்திற்கு ஏற்ற காலம் அல்ல. தம்பதிகளிடம் ஒற்றுமை உணர்வு மேலோங்கும். சிலருக்கு கண், காது சார்ந்த பிரச்சினைக்கு மருத்துவம் செய்ய நேரும். முருகனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபடவும்.

கன்னி

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம். கடந்த சில வாரங்களாக ஐந்தாம் இடத்தில் சஞ்சரித்து அபரிமிதமான சுப பலன்களை வழங்கிய ராசி அதிபதி புதன் ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்கு சென்று குருவின் பார்வையை பெறுகிறார். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் விரும்பிய மாற்றம் கிடைக்கும். பணிபுரிபவர்களின் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானாகவே வந்து சேரும். வெளிநாடு சென்றவர்கள் பூர்வீகம் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது.

கன்னி ராசியினர் தாத்தா பாட்டியாகும் யோகம் உள்ளது. சில பிள்ளைகள் கல்விக்காக விடுதிக்கு செல்வார்கள். குருவின் பார்வை ஆறாம் இடத்திற்கு இருப்பதால் கடன் நோய் சார்ந்த பாதிப்புகள் அதிகரிக்கும். அதிக கோபம் மற்றும் மன அழுத்த பாதிப்பு உருவாகும். அனைத்து செயலிலும் நிதானம் மற்றும் பொறுமை மிக முக்கியம். நேர் மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். திருமணம், வளைகாப்பு, கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்விற்கான அறிகுறிகள் தென்படும். முருகனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து வழிபடவும்.

துலாம்

தடைகள் தகரும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் லாப அதிபதி சூரியனுடன் இணைந்து நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் இணைந்திருப்பது துலாம் ராசிக்கு அபரிமிதமான சுப பலன்களை வழங்கும் அமைப்பாகும். வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படும். அன்றாட செயல்களில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கடனால் கவலை, கணவன் மனைவி பிரிவினை அல்லது வழக்கு, பிரச்சினைகள் முற்றிலும் நீங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

குல தெய்வ அனுகிரகத்தால் தடுமாற்றங்கள் அகன்று எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தின் மூலம் சமுதாய அங்கீகாரம் உயரும். சித்தப்பா மற்றும் மூத்த சகோதரருடன் பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தை நடக்கும். இந்த வாரத்தில் வீட்டுக்கடன், தொழில் விரிவாக்க கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு தந்தையின் பூர்வீக வீடு, சொத்துக்கள் கிடைக்கும். திடீர் எதிர்பாராத பணவரவால் தேவைகள் அனைத்தும் நிறைவு பெறும் என்பதால் பயப்படத் தேவையில்லை. முருகனுக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபடவும்.

விருச்சிகம்

பரிபூரண வெற்றியும் மகிழ்ச்சியும் உண்டாகும் வாரம். உச்சம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் முயற்சி மற்றும் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிப்பது இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டு தரக்கூடிய அமைப்பாகும். மூன்றாம் இடமான உபஜெய ஸ்தானம் வளம் பெறும் போது எண்ணங்கள், லட்சியங்கள், கனவுகள் நிறைவேறும். இதுவரை உடலாலும், உள்ளத்தாலும் வேதனைப்பட்டு வந்த உங்களுக்கு இனி வெற்றிக்கனியை சுவைக்கும் வாய்ப்பு வரப்போகிறது. சகோதரரால் சகாயங்கள் உண்டாகும். சிலருக்கு பணிக் காலம் முடிந்தப் பிறகும் பதவி நீடிப்புகள் ஏற்படலாம்.

நிரந்தர வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கோட்சார கிரகங்களால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கி நல்ல சுப பலன்கள் உண்டாகும். விலகிச் சென்ற உறவுகள் உண்மையை புரிந்து கொள்வார்கள். அரை குறையாக நின்ற அனைத்துப் பணிகளும் துரிதமாகும். பெண்களுக்கு ஆடை அலங்காரத்தில் ஆர்வம் குறையும். எதிர் பாலினத்தவரிடம் தேவையற்ற சகவாசத்தை தவிர்க்கவும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். முருகனுக்கு தயிர் அபிஷேகம் செய்து வழிபடவும்.

தனுசு

நல்லவிதமான திருப்பங்கள் உண்டாகும் வாரம். வெகு விரைவில் ராசி அதிபதி குரு வக்ர நிவர்த்தி அடையப் போகிறார். இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டு பெறப் போகிறீர்கள். அர்தாஷ்டம சனியையும் மீறி சில பாக்கிய பலன்கள் நடைபெறும். உங்களின் திட்டங்கள் எண்ணங்கள் செயலாக்கம் பெறும். குடும்பத்தில் நிலவிய சிறு சிறு குழப்பங்கள் மறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். அடுத்த குரு பெயர்ச்சிக்கு முன் முக்கிய சுப விசேஷங்களை நடத்தி முடிப்பது நல்லது.

அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். திட்டமிட்டபடி பாகப் பிரிவினைகள் சுமூகமாகும். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் உணர்வுப் பூர்வமாக செயல்படாமல் நிதானத்துடன் செயல்பட வேண்டும். கணவன், மனைவி ஒற்றுமையில் அன்பு மிளிரும். 2.2.2026 அன்று இரவு 10.48 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் உணர்ச்சி போராட்டம் அதிகமாகும். வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து முருகனை வழிபட முத்தாய்ப்பான முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்

மனக் குறைகள் நீங்கும் வாரம். கடந்த சில வாரங்களாக ராசியில் நிலவிய கிரகச் சேர்க்கைகளில் சில மாற்றங்கள் இந்த வாரத்தில் ஏற்படப் போகிறது. புதனும் சுக்கிரனும் தன ஸ்தானத்திற்கு செல்ல போகிறார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில தொழில் வாய்ப்புகள் கைகூடி வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். திறமைக்கும் தகுதிக்கும் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். நம்பிக்கையான புதிய வேலையாட்கள் கிடைப்பார்கள். அரசு உத்தியோக அனுகிரகம் உண்டாகும்.

பிரிந்து வாழ்ந்த தாயும், தந்தையும் சேர்ந்து வாழ்வார்கள். திருமண முயற்சி கைகூடும். சிலருக்கு மறுமணத்திற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. 2.2.2026 அன்று இரவு 10.48 முதல் 5.2.2026 அன்று அதிகாலை 4.20 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. அமைதியாக இருப்பது அவசியம். அமைதியால் அனைத்து பிரச்சினைகளும் அடிப்பட்டு போகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணம் அறிந்து செயல்படுவது நல்லது. பஞ்சகவ்ய அபிஷேகம் செய்து முருகனை வழிபட பாவங்கள் அகலும்.

கும்பம்

விரும்பிய மாற்றங்கள் நடைபெறும் வாரம். ராசியில் உள்ள ராகுவுடன் புதனும் சுக்கிரனும் இணையப் போகிறார்கள். இது கும்ப ராசிக்கு சில மாற்றங்களையும் ஏற்றங்களையும் வழங்கும் அமைப்பாகும். எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். தொழில் சார்ந்த அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும். சிலருக்கு நல்ல வெளிநாட்டு வேலை கிடைக்கும். பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும். தந்தையின் அன்பும் ஆசியும் கிடைக்கும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்டசாலியாக திகழ்வீர்கள். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். கணவன் அல்லது மனைவிக்கு உத்தியோக ரீதியான மாற்றங்கள் உண்டாகும். வங்கி கடனை திரும்பச் செலுத்த கால அவகாசம் கிடைக்கும். 5.2.2026 அன்று அதிகாலை 4.20 முதல் 7.2.2026 அன்று பகல் 1.22 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திருமண வரன் பார்ப்பதில் கவனம் மற்றும் பொறுமை தேவை. நம்பிய வேலையாட்களால் சில அசவுகரியங்கள் உண்டாகும். தேன் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

மீனம்

கொள்கை பிடிப்போடு செயல்பட வேண்டிய வாரம். ஜென்ம ராசியில் நிற்கும் சனி பகவான் சுயசாரத்தில் சஞ்சரிப்பதால் பல்வேறு விதமான புண்ணிய பலன்கள் தேடி வரும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எப்படி எல்லாம் வாழ்ந்தால் முன் ஜென்ம கர்மாவை கழித்து ஆன்மாவை சுத்தப்படுத்தி பிறவியற்ற நிலையை அடையலாம் என்பதை இந்த ஜென்ம சனியின் காலத்தில் உணர்ந்து இருப்பீர்கள். ஜென்மச் சனியை மீறிய சுப பலன்கள் உண்டாகும். கூப்பிட்ட குரலுக்கு குல தெய்வம் வந்து நிற்கும்.

பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் அகலும். உடன் பிறந்தவர்கள் அனைவரும் ஒற்றுமையாக பேசி முறையாக பாகப் பிரிவினைகளை முடிப்பீர்கள்.

கவுரவப் பதவிகள் கிடைக்கும். தந்தை மகன் ஒற்றுமை பலப்படும். திருமணத் தடை அகலும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். 7.2.2026 அன்று பகல் 1.22 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்குகளை ஒத்தி வைப்பது நல்லது. தேவையற்ற வாக்கு வாதங்கள் வீண் பேச்சுக்களைத் தவிர்க்கவும். தேனும் திணையும் படைத்து முருகனை வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Tags:    

Similar News