ரங்கசாமி வீட்டின் முன் அமர்ந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.
நள்ளிரவில் ரங்கசாமி வீட்டை ஆசிரியர்கள் முற்றுகை- பணி இடமாறுதல் கேட்டு போராட்டம்
- முதலமைச்சர் ரங்கசாமி வீட்டை இரவு 11 மணியளவில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ரங்கசாமியை ஆசிரியர்கள் நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் புதுவையை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட ஆசிரியர்-ஆசிரியைகள் பணியாற்றி வருகிறார்கள்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த நிலையில் காரைக்காலில் இருந்து தங்களை புதுவையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இவர்களுக்கு பணியிட மாற்றம் அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு இறுதியில் புதுவையில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் காரைக்காலுக்கு மாற்றப்பட்டனர். ஆனால் அவர்கள் யாரும் அங்கு பணிக்கு செல்லவில்லை. இதனால் காரைக்காலில் ஏற்கனவே பணியாற்றி வந்த ஆசிரியர்களே கோடை விடுமுறைக்குப் பிறகும் பணியை தொடர வேண்டியது ஏற்பட்டது.
இந்நிலையில் காரைக்காலில் பணியாற்றி வரும் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நேற்று மாலை பணியை முடித்துக் கொண்டு 2 பஸ்களில் புதுவைக்கு வந்தனர்.
கோரிமேட்டில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி வீட்டை இரவு 11 மணியளவில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்தவுடன் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா, போலீஸ் சூப்பிரண்டுகள் பக்தவச்சலம், சுவாதி சிங், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த முதலமைச்சர் ரங்கசாமியை ஆசிரியர்கள் நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர். அப்போது அவர், இன்று (சனிக்கிழமை) சட்டசபைக்கு வந்து தன்னை நேரில் சந்திக்க வருமாறும், அதிகாரிகளை வரவழைத்து இந்த பிரச்சினை குறித்து தீர்வு காணலாம் என்றும் ஆசிரியர்களிடம் தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட ஆசிாியர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். நள்ளிரவில் பணியிட மாறுதல் கோரி ஆசிரியர்கள் முதலமைச்சர் ரங்கசாமி வீட்டை முற்றுகையிட்டதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக புதுவை அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் பணி யிடங்களை தேர்வு நடத்தி நிரப்பக்கோரி 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு வந்து முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு கொடுத்தனர்.