புதுச்சேரி

புதுச்சேரி தொகுதி மீண்டும் காங்கிரசுக்கு 'கை' கொடுக்குமா?

Published On 2024-03-27 05:35 GMT   |   Update On 2024-03-27 05:35 GMT
  • 15 பாராளுமன்ற தேர்தல்களில் 11 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது
  • புதுவை காங்கிரசின் கோட்டையாகவே திகழ்ந்தது.

புதுச்சேரி:

பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட யூனியன் பிரதேசமான புதுவையில் 1963-ம் ஆண்டு முதல் சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் தேர்தல் நடந்து வருகிறது.

ஆரம்பகால தேர்தல்களில் சுதந்திரத்துக்கு போராடிய கட்சி காங்கிரஸ் என்பதால் மக்களிடம் பெரியளவில் மதிப்பு இருந்தது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க.வும், அதிலிருந்து பிளவுபட்டு அ.தி.மு.க.வும் தொடங்கியபோது புதுவையிலும் அந்த கட்சிகளின் ஆதிக்கம் தொடங்கியது.

பெரும்பாலும் சட்டமன்றத்தில் காங்கிரஸ்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அ.தி.மு.க. 2 முறையும், தி.மு.க. 4 முறையும், என்.ஆர். காங்கிரஸ் 2 முறையும் ஆட்சி அமைத்தனர். 1963-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றது.

அதன்பிறகு நடந்த பல தேர்தல்களில் தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தனர்.

அதேநேரத்தில் இதுவரை நடந்த 15 பாராளுமன்ற தேர்தல்களில் 11 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 1963, 1967, 1971 ஆகிய 3 தேர்தல்களில் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி பெற்றது. அதன்பின் 1980, 1984, 1989, 1991, 1996 என 5 முறை தொடர்ச்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றது. பின்னர் 1999, 2009, 2019 ஆகிய தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. இதனால் புதுவை காங்கிரசின் கோட்டையாகவே திகழ்ந்தது.

யூனியன் பிரதேசமான புதுவை மக்களும், மத்தியில் உள்ள ஆட்சியில் இருப்பவர்களுக்கு வாக்களித்தால் புதுவைக்கு நன்மை கிடைக்கும் என வாக்களித்தனர்.

வ.சுப்பையா, ப.கண்ணன் ஆகியோர் புதுவைக்கென தனி கட்சி தொடங்கினர். ஆனால் அவர்களால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை, பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் 2011-ல் காங்கிரசில் பிளவை ஏற்படுத்தி ரங்கசாமி, என்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி ஆட்சியையும் பிடித்தார்.


தொடர்ந்து 2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு என்.ஆர்.காங்கிரஸ் வெற்றியும் பெற்றது. 2019-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம், பதவியை ராஜினாமா செய்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அவர் தற்போது சிட்டிங் எம்.பி.யாக உள்ளார். அவர் மீண்டும் 2-வது முறையாக பாராளுமன்ற தேர்தலில் களத்தில் இறங்கியுள்ளார்.

அதேநேரத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் காங்கிரசில் பெரும் பிளவு ஏற்பட்டது. அமைச்சராக இருந்த நமச்சிவாயம், கட்சியிலிருந்து வெளியேறி பா.ஜனதாவில் இணைந்தார்.

அவருடன் சேர்ந்து காங்கிரசில் இருந்த பல்வேறு பிரிவுகள், அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும் வெளியேறினர். 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. தற்போது காங்கிரசுக்கு புதுவை லாஸ்பேட்டை தொகுதி, மாகி தொகுதி ஆகியவற்றில் மட்டுமே 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

ஆனால் காங்கிரஸ் கட்சியில் அடித்தளம் வரை கட்டமைப்பு உள்ளது. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனைத்து தொகுதியிலும் உள்ளனர். கூட்டணி கட்சியான தி.மு.க.வுக்கு 6 எம்.எல்.ஏ.க்கள் பலமும் உள்ளது. இதோடு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.

2021 சட்டமன்ற தேர்தலில் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து புதுவை மீண்டும் காங்கிரசின் கோட்டை என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. தங்களுக்கு சாதகமாக சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் வாக்களிப்பார்கள் என காங்கிரஸ் நம்புகிறது.

ஏனெனில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரைவிட சுமார் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார். 22 எம்.எல்.ஏ.க்கள் பலத்தோடு பா.ஜனதா போட்டியிட்டாலும் மக்கள் ஆதரவோடு மீண்டும் வெற்றி பெறுவது உறுதி என காங்கிரசார் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதற்காக அனுபவத்தின் மூலம் பிரசார வியூகம் அமைத்து தலைவர்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.

புதுவை தொகுதி காங்கிரசுக்கு மீண்டும் 'கை' கொடுக்குமா? என்பது ஜூன் 4-ந்தேதி தெரிந்து விடும்.

Tags:    

Similar News