புதுச்சேரி
null

புதுச்சேரியில் மட்டுமல்ல தமிழகத்திலும் கவர்னரால் பிரச்சனைதான்- மு.க.ஸ்டாலின் ஆவேசம்

Published On 2024-04-07 04:20 GMT   |   Update On 2024-04-07 05:43 GMT

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பொதுகூட்டத்தில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் மண்ணுக்கு வந்துள்ளேன். விடுதலை இயக்க தளபதி மக்கள் தலைவர் வ.சுப்பையாவை போற்றி பாதுகாத்த புரட்சி மண்ணுக்கு வந்துள்ளேன். கடல் அழகும், இயற்கை அழகும் கொஞ்சும் புதுவைக்கு வந்துள்ளேன். புதுவை காங்கிரஸ் வேட்பாளராக, இந்தியா கூட்டணி வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவருக்கு அறிமுகம் தேவையில்லை. புதுவை மக்களின் நலனுக்காக பாடுபட்ட விடுதலை போராட்ட குடும்பத்தை சேர்ந்தவர்.

    இப்போது 2-ம் விடுதலை போராட்டத்துக்காக வேட்பாளராக நிற்கிறார். 8 முறை எம்.எல்.ஏ., 40 ஆண்டு காங்கிரஸ் உறுப்பினர், எதிர்கட்சி தலைவர், அமைச்சர், சபாநாயகர், 2 முறை முதலமைச்சர் என பழுத்த அரசியலுக்கு சொந்தமானவர். 2-ம் முறையாக பாராளுமன்ற செல்ல ஆதரவு கேட்டு இருகரம் கூப்பி ஆதரவு கேட்டு நிற்கிறார். கடந்த தேர்தலை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். வெற்றி பெற வைப்பீர்களா? ஸ்டாலின் தூதுவனாக உங்கள் பகுதி மக்களிடமும் வாக்கு சேகரியுங்கள். அப்புறம் என்ன? வைத்திலிங்கம் வெற்றி உறுதி.

    தமிழ்நாட்டில் அண்ணாவின் ஆரியமாயை தடை செய்யப்பட்ட போது, துணிச்சலாக கவிஞர் புதுவை சிவம் வெளியிட்ட மண். கலைஞர் அரசியல்வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய மண் புதுவை. எனவே கலைஞருக்கு தமிழகமும், புதுவையும் ஒன்றுதான். அந்த உணர்வோடு ஸ்டாலினும் புதுவை மக்கள் மீது தனி பாசம் கொண்டவன்.

    இங்குள்ள சிவா, சிவக்குமார், நாஜிம் போன்ற திராவிட முன்னேற்ற உடன் பிறப்புகளும் புதுவைமக்கள் முன்னேற்றத்துக்கு பாடுபடுகின்றனர். அந்த உணர்வோடுதான் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். புதுவை வளர்ச்சிக்கு தி.மு.க.வும், காங்கிரசும் பாடுபட்டால் மாநிலத்தை எப்படி பின்னோக்கி கொண்டுசெல்லலாம் என பா.ஜனதா செயல்படுகிறது.

    இதை மக்கள் பார்த்து வருகிறார்கள். வைத்திலிங்கம் சபாநாயகராக இருந்தபோது, துணைநிலை கவர்னர் மோதினார். பா.ஜனதா கட்சி பொறுப்புகளை சேர்ந்தவர்களை நியமன உறுப்பினர்களாக நியமித்து சட்டமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கினர். ஆட்சியில் இருந்த அரசை புறக்கணித்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.

    கவர்னரால் பிரச்சினை

    மக்கள் அடிப்படை வசதிகளை செய்யாமல், வசதிகள் இல்லை என காரணம் காட்டி ரேஷன்அரிசியை தடை செய்தனர். பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை ஏன் என கேள்வி கேட்டனர். இப்படி செய்தவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சராக இருந்த நாராயணசாமிக்கு, ஒத்துழைக்காமல் அரசியல் சட்ட கடமையை காற்றில் பறக்கவிட்டு புதுவை நிர்வாகத்தை சீர்குலைத்தது பா.ஜனதா. கவர்னர் கிரண்பேடி.

    அவர் ஐபி.எஸ். ஆக இருந்தவர். ஆனால் துணைநிலை ஆளுநராக அரசியல் சட்டத்தை மீறி செயல்பட்டார். தமிழகத்திலும் ஒரு கவர்னர் உள்ளார். அவரும் ஐ.பி.எஸ். படித்தவர். அவரிடம் மாட்டி முழித்துக்கொண்டு இருக்கிறோம். அவரே இருக்கட்டும் என நாம் சொல்கிறோம். அவர் இருந்தால் தி.மு.க.வுக்கு பெரிய பிரசாரமே நடக்கிறது. காவல்துறையில் பதவிக்காலம் முடிந்தவுடன், இவர்களை கவர்னராக்கி அரசியல் சட்டத்தை மீறி பா.ஜனதா ஏஜெண்டுகள் போல விளம்பரத்துக்காகவே செயல்படுகின்றனர். கவர்னர்கள் தொல்லை கொடுப்பது எதிர்கட்சி மாநிலம் மட்டுமல்ல.

    புதுவையில் ஆளும் கூட்டணியில் உள்ள ரங்கசாமிக்கும் ஏகப்பட்ட நெருக்கடி. பா.ஜனதாவை பொறுத்தவரை புதுவை மக்களின் முன்னேற்றம், வளர்ச்சி பற்றி கவலைப்பட மாட்டார்கள். அதிகாரத்தை கைப்பற்ற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இதுதான் பா.ஜனதாவின் கொள்கை.

    தமிழகம்போல மாநிலம் இருந்தால் நகராட்சியாக மாற்ற வேண்டும். புதுவை போல யூனியன் பிரதேசத்தை கிராம பஞ்சாயத்தாக மாற்ற வேண்டும். ஒட்டுமொத்தாக அனைவரும் டெல்லிக்கு கீழ் இருக்க வேண்டும். இதுதான் பா.ஜனதாவின் தீர்மானம். அதனால்தான் கூட்டணி அரசு இருந்தாலும், புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்காமல், தன் கைப்பிடியில் பா.ஜனதா வைத்துள்ளது. அவர்களுக்கு கைப்பாவையாக புதுவை முதலமைச்சர் ரங்கசாமி உள்ளார். இந்த அவலங்கள் தீர இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வர வேண்டும். நாடு மீண்டும் ஜனநாயக பாதையில் கம்பீரமாக நடை போட வேண்டும்.

    மாநில உரிமைகள் மட்டுமல்ல, யூனியன் பிரதேச உரிமைகளும் பாதுகாக்கப்பட இந்தியா கூட்டணியை நாடு தழுவிய அளவில் அமைத்துள்ளோம். புதுவை முன்னேற வேண்டும். புதுவை மக்கள் வாழ்வில் புதுமலர்ச்சி ஏற்பட வேண்டும்.

    பா.ஜனதா ஆட்சி வீட்டுக்கு போக வேண்டும். இந்தியா கூட்டணி டெல்லியில் ஆட்சியில் அமர வேண்டும்.

    ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சியில் அமரும்போது சாதனைகளாக மாறப்போகும் வாக்குறுதிகளை கூறியுள்ளோம். அதில் முக்கிய வாக்குறுதியாக புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம்.

    இது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் எதிரொலித்துள்ளது. புதுவை மக்களின் பல நாள் கனவான மாநில அந்தஸ்து ஜூன் 4-ந் தேதி இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் நிறைவேறப்போகிறது.

    மாநிலங்களுக்கும், நாட்டுக்கும் நம்பிக்கை அளிக்கும் தேர்தல் அறிக்கையாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது. தி.மு.க. சார்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக அளித்துள்ளோம்.

    சிறுபான்மையினர் எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும். தேசியநெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.

    பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். காரைக்கால், நாகை, தஞ்சை இரட்டை ரெயில்பாதை, கிழக்கு கடற்கரை சாலையில் கன்னியாகுமரி வரை புதிய ரெயில்பாதை அமைக்கப்படும்.

    மாநில கவர்னர் அதிகாரம் குறைக்கப்படும். ஆர்.எஸ்.எஸ். பிடியில் சிக்கியுள்ள சர்வதேச நகரமான ஆரோவில், அரவிந்தர், அன்னை கனவுப்படி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். புதிய கல்விக்கொள்கை புதுவையில் நீக்கப்படும். ஜிப்மரில் மீண்டும் இலவச மருத்துவம், வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட காரைக்கால் ஜிப்மர் கிளை முழு அளவு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

    10 ஆண்டு மோடி ஆட்சியில் புதுவைக்கு இழைக்கப்பட்ட அநீதிகள்தான் அதிகம். மின்துறையை தனியாருக்கு தாரை வார்க்க சதிதிட்டம் தீட்டப்பட்டுள்ளது. மின்துறை ஊழியர்கள் வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது.

    மின் கட்டண விலையை கேட்டால் ஷாக் அடிக்கிறது. துணை நிலை ஆளுநர் மூலம் அரசியல் கூத்துகளை அரங்கேற்றி வருகின்றனர்.

    கிரண்பேடிக்கு பிறகு சகோதரி தமிழிசை வந்தார். புதுவையில் உட்கார்ந்துகொண்டு, தமிழக அரசியலை பேசினார். தேர்தல் வந்தவுடன் பா.ஜனதாவுக்கு திரும்ப சென்றுவிட்டார். புதுவை வரலாற்றில் கவர்னர் மாளிகையில் முதலமைச்சராக இருந்த நாராயணசாமி அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதுதான் புதுவைக்கு பா.ஜனதா செய்த சாதனை.

    ரங்கசாமியை தங்கள் பேச்சை கேட்க சொல்லி பாடாய் படுத்துகிறார்கள். ரங்கசாமி தனி கட்சி தொடங்க காரணமே நமச்சிவாயம் தான்.

    இப்போது அவருக்காக ரங்கசாமி ஓட்டு கேட்டு வருகிறார். நமச்சிவாயம் எத்தனை கட்சி மாறினார் என்று கணக்கு போட்டால் தலையே சுற்றுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Tags:    

    Similar News