புதுச்சேரி

புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் தாமரை மலருமா?

Published On 2024-03-25 04:50 GMT   |   Update On 2024-03-25 04:50 GMT
  • சட்டமன்றத்தில் 38 ஆண்டுக்கு பிறகு 2001-ல் முதல்முறையாக பா.ஜனதா நுழைந்தது.
  • தமிழகத்தின் நுழைவு வாயிலாக புதுச்சேரியை பா.ஜனதா கருதுகிறது.

புதுச்சேரி:

பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட புதுச்சேரி யூனியன் பிரதேசமாக உருவெடுத்தது.

1962-ல்தான் அதிகாரப்பூர்வமாக இந்தியாவுடன் இணைந்தது. அதன்பிறகு 1963-ம் ஆண்டு முதல் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும், சட்டசபைக்கும் தேர்தல் நடந்து வருகிறது.

சட்டமன்றத்தில் 38 ஆண்டுக்கு பிறகு 2001-ல் முதல்முறையாக பா.ஜனதா நுழைந்தது. தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜனதா தேர்தலை சந்தித்தது. ரெட்டியார்பாளையம் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.

இதன்பிறகு 2006, 2011 சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெறவில்லை. 2014-ல் புதுவை சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டனர். அதில் பா.ஜனதா மாநில தலைவராக இருந்த விஸ்வேஸ்வரன் புதுவை சட்டசபையில் நியமன எம்.எல்.ஏ.வாக நுழைந்தார்.


அதன்பிறகு 2016 தேர்தலில் பா.ஜனதா எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அதே நேரத்தில் மத்தியிலிருந்த பா.ஜனதா புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது. அப்போது இருந்த கவர்னர் கிரண்பேடி உறுதுணையோடு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், தற்போதைய பா.ஜனதா தலைவரான செல்வகணபதி மற்றும் கட்சியின் பொருளாராக இருந்த சங்கர் ஆகியோர் புதுச்சேரி சட்டசபைக்குள் நுழைந்தனர். இதன்பின் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. என்ற கூட்டணி உருவானது. இதில் 9 தொகுதியில் போட்டியிட்டு 6 தொகுதியில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றனர். புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்த ஆட்சியில் பா.ஜனதாவில் இருந்து சபாநாயகர், 2 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதுதவிர மத்திய அரசு நேரடியாக 3 பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்களையும் புதுச்சேரிக்கு நியமித்தது. இதனால் புதுச்சேரி சட்டசபையில் தற்போது 9 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இருப்பினும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் இதுவரை பா.ஜனதாவின் தாமரை மலர்ந்ததே இல்லை.

ஆரம்பகால கட்டத்தில் எந்த கூட்டணியிலும் இடம்பெறாமல், பா.ஜனதா தனித்து போட்டியிட்டது. அப்போதெல்லாம் சொற்ப எண்ணிக்கையிலான வாக்குகளை மட்டும்தான் பெற்றது. 1999-ல் தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இடம் பெற்றது. அப்போது கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் புதுச்சேரியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

2004-ல் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி உருவானது. இந்த கூட்டணி சார்பில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக லலிதா குமாரமங்கலம் போட்டியிட்டார். அவர்தான் கணிசமான வாக்குகளை பெற்று டெபாசிட் பெற்றார்.



இதன்பிறகு 2009ல் பா.ஜனதா கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டது. பா.ஜனதா வேட்பாளர் விஸ்வேஸ்வரன் 13 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றார். 2014ல் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க.வுடன் பாஜனதா கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணியில் புதுவை தொகுதியில் பா.ம.க. போட்டியிட்டு, தோல்வியடைந்தது. 2019 பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் என்ஆர்.காங்கிரஸ் போட்டியிட்டது. என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கம் 4,44,981 வாக்குகள் வாங்கினார். என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நாராயணசாமி கேசவன் 2,47,956 ஓட்டுகள் பெற்றார். 1,97,025 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

தமிழகத்தின் நுழைவு வாயிலாக புதுச்சேரியை பா.ஜனதா கருதுகிறது. இதனால்தான் தற்போது புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு கட்சியை அடிமட்டம் வரை கொண்டு செல்ல வேண்டும் என முடிவெடுத்துள்ளது. இதற்கு சரியான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதில் பா.ஜனதா தலைமை உறுதியாக இருந்தது.

உள்துறை அமைச்சராக உள்ள நமச்சிவாயம் போட்டியிட மறுப்பு தெரிவித்தாலும், வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தோடு, பா.ஜனதா மேலிடம் நேரடியாக தலையிட்டு அவரை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளது.

தற்போது பா.ஜனதாவுக்கு கூட்டணி ஆட்சியும், பா.ஜனதாவுக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து 22 எம்.எல்.ஏ.க்கள் பலமும் உள்ளது.

அதோடு பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த நமச்சிவாயம் போட்டியிடுகிறார். ஆட்சியின் செல்வாக்கை நிரூபிக்க முதலமைச்சர் ரங்கசாமியும், தீவிரமாக களப்பணியாற்றுவார். இதனால் பா.ஜனதாவின் நீண்ட கால போராட்டத்துக்கு வெற்றி கிடைத்து, தாமரை புதுவையில் மலரும் என்று பா.ஜனதாவினர் எதிர்பார்க்கின்றனர். புதுவை பாராளுமன்ற தொகுதிக்கு 1963-ம் ஆண்டு முதல் இதுவரை 15 தேர்தல்கள் நடந்துள்ளது.

1996-ம் ஆண்டு நடந்த தமிழகம், புதுவை சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வும், த.மா.கா.வும் இணைந்து தேர்தலை சந்தித்தன.

தமிழகத்தில் வெற்றி பெற்ற இந்த கூட்டணியில் கருணாநிதி தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது. புதுவையில் தி.மு.க., த.மா.கா. கூட்டணி ஆட்சி முதலமைச்சர் ஜானகிராமன் தலைமையில் அமைந்தது. அமைச்சரவையில் உள்துறை பொறுப்பை ப.கண்ணன் வகித்து வந்தார்.

1999-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது, தி.மு.க., பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது. இதனால் தமிழகத்தில், தி.மு.க. கூட்டணியிலிருந்து த.மா.கா. வெளியேறியது. அதே நேரத்தில் புதுவையில் கூட்டணி ஆட்சி இருந்தது. உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ப.கண்ணன் த.மா.கா. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்பு 2000-ம் ஆண்டில் த.மா.கா., தி.மு.க.வுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதால் புதுவை தி.மு.க. அரசு கவிழ்ந்தது.

இதன்பின் 25 ஆண்டுக்கு பிறகு உள்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயம் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாராளுன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் களம் இறங்கியுள்ளார். 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சரித்திரம் திரும்பியுள்ளது.

Tags:    

Similar News