புதுச்சேரி

புதுச்சேரி எம்.பி தொகுதியில் நேரடி மோதலுக்கு தயாராகும் பா.ஜ.க.-காங்கிரஸ்

Published On 2023-06-26 14:38 IST   |   Update On 2023-06-26 14:38:00 IST
  • எதிர்கட்சி தரப்பில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி உள்ளது.
  • காங்கிரசின் கோட்டை புதுவை என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என புதுவை காங்கிரசார் விரும்புகின்றனர்.

புதுச்சேரி:

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதமே உள்ள நிலையில் அகில இந்திய அளவில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

சமீபத்தில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதேபோல் மாநிலங்களிலும் மாநில கட்சி அளவில் கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

புதுவையில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்து வருகிறது. தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலத்துக்கு பிறகு புதுச்சேரியில்தான் பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

தற்போது கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை இழந்துள்ள நிலையில் புதுச்சேரியில் பா.ஜ.க.வை காலூன்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் 9 தொகுதியில் போட்டியிட்டு 6 தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றது. மாநிலம் முழுவதும் பா.ஜ.க.வை கொண்டு செல்ல பாராளுமன்ற தேர்தல் வாய்ப்பாக அமையும் என்று பாஜக தலைமை கருதுகிறது. அதோடு பா.ஜ.க. போட்டியிடும் பாராளுமன்ற தொகுதி பட்டியலிலும் புதுச்சேரி இடம் பெற்றுள்ளது.

இதனால் புதுவையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பே தேர்தல் பணியை தொடங்கிவிட்டது. எம்.பி. தொகுதி பொறுப்பாளராக மத்திய மந்திரி எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மாதம் 2 முறை புதுவைக்கு வந்து தொகுதியளவில் பா.ஜ.க.வினரை சந்தித்து பேசுகிறார்.

சமீபத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனும் புதுவைக்கு வந்தார். அவர் பூத் கமிட்டிகளை பலப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதனிடையே மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கும் பிரசாரம் புதுவையில் தீவிரமாக நடந்து வருகிறது.

இதில் தொகுதிதோறும் வீடு, வீடாக சென்று பா.ஜ.க.வினர் மோடி அரசின் சாதனைகளை விளக்கி கூறி வருகின்றனர். இது தேர்தலுக்கு முன்கள பிரசாரமாக பார்க்கப்படுகிறது. மேலும் நகரின் ஒரு சில பகுதிகளில் பா.ஜ.க. 2024 என குறிப்பிட்டு தாமரை சின்னத்தையும் வரைந்து வாக்கு கேட்க தொடங்கியுள்ளனர்.

புதுவை எம்.பி. தேர்தலில் போட்டியிடும் தகுதியான வேட்பாளர்கள் பட்டியலையும் புதுவை பா.ஜ.க. மேலிடத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பட்டியலில் தற்போதைய சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், நியமன எம்.எல்.ஏ. வி.பி.ராமலிங்கம், மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

எதிர்கட்சி தரப்பில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி உள்ளது. இதில் காங்கிரஸ் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் காங்கிரசின் கோட்டை புதுவை என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என புதுவை காங்கிரசார் விரும்புகின்றனர்.

சமீபத்தில் மாநில காங்கிரஸ் தலைவராக தற்போதைய எம்பி வைத்திலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் வைத்திலிங்கம் எம்.பி.தான் மீண்டும் போட்டியிடுவார் என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

வைத்திலிங்கத்திடம் கட்சித் தலைமை மாநில தலைவர் பதவியை அளிக்கும்போதே, தேர்தலில் போட்டியிட்டு வெற்றியை பெற்றுத்தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கட்சியை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக அவர் இறங்கியுள்ளார்.

கூட்டணி கட்சிகளையும் அரவணைத்து செல்லும் பணியிலும் வைத்திலிங்கம் இறங்கியுள்ளார். கூட்டணி கட்சி அலுவலகங்களுக்கு சென்று கட்சி தலைவர்களை நேரடியாக சந்தித்து வருகிறார். வைத்திலிங்கம் சார்ந்துள்ள ரெட்டியார் சமூகத்தினர் வாக்குகள் சுமார் 50 ஆயிரம் உள்ளது.

இதோடு சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களின் வாக்குகளையும் இணைத்தால் சுமார் 2 லட்சம் வாக்குகள் கிடைக்கும். இதனை பெறும் பட்சத்தில் வெற்றி எளிது என புதுவை காங்கிரசார் கணக்கிட்டுள்ளனர்.

இதனால் புதுவை பாராளுமன்ற தேர்தல் களத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் நேரடியாக மோதும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Tags:    

Similar News