புதுச்சேரி

பதவி நீக்கப்பட்ட சந்திரபிரியங்காவுக்கு பதிலாக புதுச்சேரியில் புதிய அமைச்சர் நியமனம்

Published On 2024-03-06 03:49 GMT   |   Update On 2024-03-06 03:49 GMT
  • காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரசின் எம்.எல்.ஏ. திருமுருகன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
  • புதுவை அமைச்சராக திருமுருகனை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான இந்த ஆட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 அமைச்சர்களும், பா.ஜனதாவை சேர்ந்த 2 அமைச்சர்களும் பதவி வகித்து வந்தனர்.

இதில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் காரைக்கால் நெடுங்காடு (தனி) தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற சந்திர பிரியங்கா போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அவர் துறைகளை சரியாக கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் சந்திரபிரியங்கா பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்தநிலையில், காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரசின் எம்.எல்.ஏ. திருமுருகன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். புதுவை அமைச்சராக திருமுருகனை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். புதிய அமைச்சராக திருமுருகன் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு சட்டசபை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவியேற்க உள்ளார். பதவி ஏற்ற பின், அவருக்கான துறை ஒதுக்கப்படும்.

Tags:    

Similar News