புதுச்சேரி

மோடி பிரதமராவதை தடுக்கும் எண்ணிக்கையில் வெற்றி பெறுவோம்: மல்லிகார்ஜூன கார்கே

Published On 2024-04-16 05:14 GMT   |   Update On 2024-04-16 07:31 GMT
  • ஜனநாயகம், அரசியலமைப்பு, அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை காக்க மக்களிடம் கோருகிறோம்.
  • பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன.

புதுச்சேரி:

புதுவைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் நமது உரிமைகள் காக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பில் நமக்கு தந்துள்ள உரிமைகளை நிலைநாட்ட தேர்தல் மிக முக்கியமானது. இந்திய மக்களும் இதை உணரத் தொடங்கியுள்ளனர்.

ஐ.டி., அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் பலவீனப்படுத்தப்படுகின்றன. அரசியலமைப்பை மதிக்காதோரை இந்த அமைப்புகளின் தலைவராக்குகிறார்கள்.

ஒத்துழைப்பு தராதோரை அழுத்தம் தந்து ராஜினாமா செய்ய வைத்து வேண்டியோரை நியமித்து, பிரதமர் மோடி இந்த அமைப்புகளை தங்கள் தேவைக்கு பயன்படுத்துகிறார். அதனை அமித்ஷா செயல்படுத்துகிறார்.

ஜனநாயகம், அரசியலமைப்பு, அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை காக்க மக்களிடம் கோருகிறோம். மோடி தனது அரசை பற்றி பேசாமல் தன்னை பற்றி மட்டுமே முன்னிறுத்துவதால் அவரை விமர்சிக்கிறோம். இது தனிமனித விமர்சனமாக பார்க்கக்கூடாது.

பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன. வேலைவாய்ப்பு, வெளிநாட்டு கள்ளப்பணம் மீட்பு உள்ளிட்டவை உதாரணங்கள். இதுவரை தந்த எந்த வாக்குறுதிகளையும் மோடி நிறைவேற்றவில்லை.

பிரசாரத்துக்கு வரும் மோடி தொடர்ந்து காங்கிரசையும் ஆட்சியில் தற்போது இல்லாத காந்தி குடும்பத்தினரை விமர்சிக்கிறார். அது காங்கிரஸ் மீதான பயத்தை வெளிப்படுத்துகிறது. காங்கிரசை அழிக்க முயற்சிக்கிறார்.

தமிழகம், புதுச்சேரியில் இந்தியா கூட்டணி தி.மு.க. தலைமையில் அனைத்து இடங்களிலும் வெல்லும். கருத்து கணிப்புகள் விஷயத்தில் கருத்து கூற விரும்பவில்லை. பல ஏஜென்சிகள் பலதரப்பட்ட கருத்துகளை தெரிவிக்கின்றனர். நாங்கள் மோடி பிரதமராவதை தடுத்து நிறுத்தி நல்ல எண்ணிக்கையில் இடங்களை இந்தியா கூட்டணி பெறுவோம்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லாதது. சட்டப்பேரவை தேர்தல், மக்களவைத்தேர்தல் ஆகியவை ஒன்றுக்கொன்று வித்தியாசமானது. புதுச்சேரி, தமிழ்நாடு அல்ல லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. கூட்டம் நிரம்பியுள்ளதா என்பதை விட எங்கள் கருத்தை பகிர்வதே முக்கியம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News