புதுச்சேரி

பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதி: வியூகங்கள் அமைத்து நிர்வாகிகள் ஆலோசனை

Published On 2024-01-01 08:01 GMT   |   Update On 2024-01-01 08:01 GMT
  • மத்திய பா.ஜனதா ஆட்சியில் நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • தேர்தல் பொறுப்புகளை ஒருவரே செய்யாமல் அனைவரும் பகிர்ந்து பணியாற்ற வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை மாநில பா.ஜனதாவில் மாநில நிர்வாகிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

புதிய நிர்வாகிகளின் முதல் கூட்டம் நடந்தது. பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. தலைமை வகித்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ரிச்சர்டு, ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு, சிவசங்கர் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் புதுவை மாநில பா.ஜனதா பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேசியதாவது:-

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா ஆட்சியில் நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

முத்ரா திட்டம், கியாஸ் திட்டம் அனைத்து ஏழை மக்களையும் சென்றடைந்துள்ளது. புதுவையில் 3.5 லட்சம் பேர் மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்துள்ளனர்.

அவர்களை சந்தித்து நாடாளுமன்ற தேர்தலில் நாம் பணியாற்ற வேண்டும். அதற்கேற்ப வியூகங்களை வகுக்க வேண்டும். புதுவையில் பா.ஜனதா வேட்பாளர்தான் போட்டியிடுவார்.

எனவே பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற நிர்வாகிகள் இரவு, பகலாக உழைக்க வேண்டும். தேர்தல் பொறுப்புகளை ஒருவரே செய்யாமல் அனைவரும் பகிர்ந்து பணியாற்ற வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து பூத்களிலும் பா.ஜனதாவை பலப்படுத்த வேண்டும். மீண்டும் மத்தியில் பா.ஜனதா ஆட்சி மலரும் போது நாட்டில் அபரிதமான வளர்ச்சி இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மத்திய அரசு செய்த திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News