புதுச்சேரி பெண் போலீசாருக்கு பாலியல் துன்புறுத்தல்- பயிற்சி பள்ளி அதிகாரிகளிடம் விசாரணை
- பயிற்சியின்போது பெண் போலீசாருக்கு பயிற்சி கொடுத்த சிலர் பாலியல் ரீதியான துன்புறுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளது.
- பயிற்சி காலத்தில் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த 2022-ம் ஆண்டு 131 பெண் மற்றும் 252 ஆண் போலீஸ்காரர்கள் என மொத்தம் 383 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளியில் ஓராண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்த போலீசார் தற்போது போலீஸ் நிலையங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பயிற்சியின்போது பெண் போலீசாருக்கு பயிற்சி கொடுத்த சிலர் பாலியல் ரீதியான துன்புறுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர், போலீஸ்துறை உயரதிகாரிகளுக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஆண் போலீசாருக்கு பயிற்சி கொடுக்க நியமிக்கப்பட்ட 2 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசாரை அணிவகுப்பின்போது தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக உயர் அதிகாரிக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குற்றம் சாட்டப்பட்டவரும், விசாரிக்கும் நபரும் ஒரே பகுதி(மாகி)யை சேர்ந்தவர்கள் என்பதால் புகார் விசாரிக்கப்படவில்லை.
பயிற்சி காலத்தில் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது. ஆனால் 2 உதவி சப்-இன்ஸ்பெக்டர்களும் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு செல்போன் வழங்கினர்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் பயிற்சி பள்ளியில் விசாரித்தபோது, பயிற்சி முடித்து சென்ற சிலர் அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கில் மொட்டை கடிதம் எழுதி போட்டுள்ளனர்.
பயிற்சி நிறைவு பெறும் முன்பு பெண் போலீசாரிடம் இதுகுறித்து தனித்தனியே விசாரிக்கப்பட்டது. அப்போது யாரும் நேரடியாக புகார் தெரிவிக்க முன்வரவில்லை. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையில் உண்மை தெரிய வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.