புதுச்சேரி

புதுவை வணிகவரி அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை

Published On 2024-01-06 08:20 GMT   |   Update On 2024-01-06 08:20 GMT
  • வரி வசூலில் முறைகேடு நடப்பதாக சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு புகார் வந்தது.
  • விசாரணையையொட்டி வணிகவரித்துறை அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது.

புதுச்சேரி:

புதுவை 100 அடி சாலையில் வணிக வரித்துறை அலுவலகம் உள்ளது.

இங்குள்ள அதிகாரிகள் புதுவையில் உள்ள தொழிற்சாலைகள், வணிகர்கள், வர்த்தக நிறுவனங்களிடம் வரி வசூலிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு வரி வசூலில் முறைகேடு நடப்பதாக சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு புகார் வந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் சென்னையை சேர்ந்த சி.பி.ஐ. அதிகாரிகள் 3 பேர் நேற்று இரவு 8 மணி முதல் வணிகவரித்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று 2-வது நாளாக சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு பெண் அதிகாரி உள்ளிட்ட 3 அதிகாரிகளிடம் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில ஆவணங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். விசாரணையையொட்டி வணிகவரித்துறை அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. அலுவலகத்துக்குள் யாரையும் பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை.

இன்று மதியம் 12 மணியளவில் ஒரு கார் வந்தது. அதில் முகத்தை மூடிய ஒரு நபரை அலுவலகத்துக்குள் சி.பி.ஐ.அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். வணிகவரித்துறை அலுவலகத்தில் விசாரணை செய்யப்பட்ட அதிகாரிகள் அளித்த தகவலின்பேரில் அந்த நபரை அழைத்து வந்ததாக தெரிகிறது.

தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News