செய்திகள்

கன்னியாகுமரி திருப்பதி கோவில் கும்பாபிஷேகம் - பக்தர்கள் தரிசனம்

Published On 2019-01-27 12:22 GMT   |   Update On 2019-01-27 12:22 GMT
கன்னியாகுமரியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி கோவில் கட்டப்பட்டு இன்று கும்பாபிஷேகமும் கோலாகலமாக நடைபெற்றது. #Tirupati #TirupatiTemple

கன்னியாகுமரி:

இந்தியாவின் தென்கோடி முனையில் உள்ள கன்னியாகுமரி பிரசித்திப் பெற்ற ஆன்மீக தலமாக திகழ்கிறது. இங்குள்ள விவேகானந்த கேந்திரா கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.22½ கோடி செலவில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 22-ந்தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்து வந்தது. நேற்று முன்தினம் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று 6-வது நாளாக யாகசாலை பூஜைகள் நடந்தது. மேலும் அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாதம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதை தொடர்ந்து காலை 7 மணிக்கு யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த 4 புனித நீர் குடங்கள் திருப்பதி குடைகள் புடைசூழ மேளதாளங்களுடன் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சரியாக காலை 7.15 மணிக்கு இங்குள்ள மூலவர் வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயார், ஆண்டாள் அம்மாள் ஆகிய 3 சன்னதிகளிலும் மூலஸ்தான கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

 


 

அதை தொடர்ந்து 7½ அடி உயரமுள்ள ஏழுமலையான், 3½ அடி உயரமுள்ள பத்மாவதி தாயார், 3½ அடி உயரமுள்ள ஆண்டாள் அம்மாள் ஆகிய 3 சன்னதிகளிலும் விசே‌ஷ அபிஷேகங்கள் நடந்தது.

பால், பன்னீர், எண்ணை போன்ற பொருட்களை பயன்படுத்தி இந்த அபிஷேகங்கள் நடந்தது. கருடாவாழ்வார் சன்னதியிலும் அபிஷேகங்கள் நடந்தது. மேலும் தீபாராதனை காட்டி சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் 60 அர்ச்சகர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் மற்றும் கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் பக்தி கோ‌ஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

 


 

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்கள் மூலவர் உள்பட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பகல் 12.30 மணி முதல் நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்ய வசதியாக தடுப்பு கம்பிகள் கட்டப்பட்டிருந்தது. உள்ளூர் மற்றும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு திருப்பதி லட்டு பிரசாதம் மற்றும் புளியோதரை, பொங்கல் ஆகியவை வழங்கப்பட்டது.

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டு பயணிகளும் திரளாக கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலில் உள்ள மண்டபத்தில் இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை சீனிவாச திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பல்வேறு பூஜைகளும் நடைபெறுகிறது.

கடந்த 2010-ம் ஆண்டு இதே விவேகானந்தபுரம் கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்துதான் தற்போது கன்னியாகுமரியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி கோவில் கட்டப்பட்டு இன்று கும்பாபிஷேகமும் கோலாகலமாக நடந்துள்ளது. #Tirupati #TirupatiTemple

Tags:    

Similar News