வங்காளதேசத்தில் வன்முறை: அரசியல் தலைவர் வீட்டுக்கு தீவைப்பு- 7 வயது மகள் கருகி பலி
- இந்திய தூதரகங்கள், இந்திய தூதர் வீடு ஆகியவை மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
- வீட்டின் கதவுகளை வெளிப்புறமாக பூட்டிவிட்டு பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினர்.
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணமாக இருந்த மாணவர்கள் போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்களில் முக்கிய தலைவராக இருந்த ஷெரீப் உஸ்மான் ஹாடி(வயது 32) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனால் வங்காளதேசத்தில் கடந்த 11-ந்தேதி இரவு இளைஞர்கள் போராட்டங்களில் குதித்தனர். இதில் பயங்கர வன்முறை வெடித்தது. அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
ஷெரீப் உஸ்மான், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட வர் என்பதால் இந்திய தூதரகங்கள், இந்திய தூதர் வீடு ஆகியவை மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், இந்து இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். நேற்று மாலை பாராளுமன்றத்தை கைப்பற்ற இளைஞர்கள் முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.
இந்தநிலையில் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதில் அவரது 7 வயது மகள் உயிரிழந்து உள்ளார். வங்காளதேச தேசியவாத கட்சியின் அமைப்பு செயலாரும், தொழில் அதிபருமான பெலால் ஹொசைன் பபானிகஞ்ச் பகுதியில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே நேற்று அதிகாலை பெலால் ஹொ சைன் வீட்டுக்கு கும்பல் ஒன்று தீ வைத்தது. வீட்டின் கதவுகளை வெளிப்புறமாக பூட்டிவிட்டு பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினர். இதில் பெலால் ஹொசைனின் 7 வயது மகள் ஆயிஷா அக்தர் தீயில் கருகி உயிரிழந்தார்.
மேலும், பெலால் ஹொ சைனும், அவரது மற்ற 2 மகள்களான சல்மா அக்தர் (வயது 16), சாமியா அக்தர் (14) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே சுட்டு கொல்லப்பட்ட ஷெரீப் உஸ்மான் ஹாடி உடல் அடக்கம் நேற்று மதியம் நடந்தது. இதில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டார்.
மாணவர் இயக்க தலைவர் இறுதிச் சடங்கில் பங்கேற்ற இடைக் கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் பேசும்போது, வங்கா ளதேசம் இருக்கும் வரை ஷெரீப் உஸ்மான் அனைத்து வங்காளதேச மக்களின் இதயங்களிலும் நிலைத்திருப்பார். நீங்கள் எங்களிடம் கூறியதை நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம்.
அவரது வார்த்தைகளும் தொலைநோக்குப் பார்வையும் தேசத்தின் நினைவில் நிலைத்திருந்து எதிர்கால சந்ததியினருக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றார்.
இந்த நிலையில் வங்காள தேசத்தில் உள்ள இந்திய தூதரங்கள், விசா மையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.