உலகம்

உக்ரைனுக்கு மேலும் ரூ.3,238 கோடி ராணுவ உதவி: அமெரிக்கா தாராளம்

Published On 2022-11-12 02:51 GMT   |   Update On 2022-11-12 02:51 GMT
  • உக்ரைன் ரஷியா போர் 8 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது.
  • போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா பல ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.

வாஷிங்டன் :

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 8 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னபின்னமாகியுள்ளன. பல நகரங்களை ரஷியா தன்வசப்படுத்தியுள்ளது.

ஆனாலும் உக்ரைன் ராணுவம் துணிச்சலுடன் தொடர்ந்து ரஷிய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றன. உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை செய்து வருகின்றன.

அந்த வகையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா பல ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் 400 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,238 கோடி) மதிப்புடைய ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பவுள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இதனை தெரிவித்தார்.

புதிதாக வழங்கப்படும் இந்த ராணுவ உதவி தொகுப்பில் முதல் முறையாக அதிநவீன வான்பாதுகாப்பு அமைப்பு, ரஷியாவுக்கு எதிரான தனது பதில் தாக்குதலில் உக்ரைன் வெற்றிகரமாக பயன்படுத்தி வரும் ஹிமார்ஸ் எனப்படும் அதீத சக்தி கொண்ட பீரங்கி ராக்கெட் அமைப்பு உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே உக்ரைனுக்கு வழங்குவதற்காக தென்கொரியாவிடம் இருந்து சுமார் 1 லட்சம் ஹோவிட்சர் பீரங்கி குண்டுகளை அமெரிக்க வாங்க இருப்பதாகவும், இது தொடர்பாக அமெரிக்கா-தென்கொரியா அரசுகள் சிலகாலமாக ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்க ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News