ஜெர்மனியில் உள்ள BMW உற்பத்தி ஆலையை பார்வையிட்டார் ராகுல் காந்தி
- இன்று ராகுல் காந்தி பெர்லினில் புலம் பெயர்ந்த இந்தியர்களை சந்திக்கிறார்.
- காங்கிரஸ் வெளிநாட்டு தலைவர்களையும் ராகுல் காந்தி சந்தித்து பேசுகிறார்.
பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகிற 15-ந்தேதி ஜெர்மனி புறப்பட்டு சென்றார். 20-ந்தேதி வரை அவர் ஜெர்மனியில் இருப்பார்.
இன்று அவர் பெர்லினில் புலம் பெயர்ந்த இந்தியர்களை சந்திக்கிறார். அதோடு ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து காங்கிரஸ் வெளிநாட்டு தலைவர்களையும் ராகுல் காந்தி சந்தித்து பேசுகிறார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அயலக காங்கிரசில் அதிக அளவில் உறுப்பினர்களை இணைப்பது, அமைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை ராகுல் காந்தி நடத்தவுள்ளார்.
இந்நிலையில், இன்று ராகுல் காந்தி முனிச்சில் உள்ள BMW உற்பத்தி ஆலையை பார்வையிட்டார். குறிப்பாக ராகுல் காந்தி, பி.எம்.டபிள்யூ. நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட டி.வி.எஸ். நிறுவனத்தின் 450சிசி மோட்டார் சைக்கிளில் அமர்ந்து பார்த்தார். இது தொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
இதனிடையே பேசிய ராகுல் காந்தி, "வலுவான பொருளாதாரங்களுக்கு உற்பத்தித் துறைதான் முதுகெலும்பாகத் திகழ்கிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் உற்பத்தித் துறை சரிவைச் சந்தித்து வருகிறது. நாம் வளர்ச்சியை வேகப்படுத்த வேண்டுமானால், நாம் அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும். மேலும் பெருமளவில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.