அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி வீட்டுச்சிறையில் மரணம்?.. மகனால் பரபரப்பு
- மக்களாட்சி நிறுவப்பட்டு பொதுத்தேர்தல் நடந்தபோது ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி பெரும்பான்மையை பிடித்து ஆட்சி அமைத்தது.
- 2021-ம் ஆண்டு மியான்மரில் மீண்டும் புரட்சி வெடித்து ராணுவ ஆட்சி அமைக்கப்பட்டது.
மியான்மரை சேர்ந்தவர் ஆங் சாங் சூகி (வயது 80). அந்தநாட்டின் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய தலைவர். இதற்காக 1991-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
அங்கு ராணுவ ஆட்சி ஒழிக்கப்படுவதற்கு 1988-ம் ஆண்டு ஆங் சாங் சூகி நிறுவிய தேசிய ஜனநாயக கட்சி முக்கிய பங்கு வகித்தது. 1989 முதல் 2010 வரை 20 ஆண்டுகள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
மக்களாட்சி நிறுவப்பட்டு பொதுத்தேர்தல் நடந்தபோது ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி பெரும்பான்மையை பிடித்து ஆட்சி அமைத்தது.
தொடர்ந்து நாட்டின் அரசு ஆலோசகராக செயல்பட்டு வந்தார். 2021-ம் ஆண்டு மியான்மரில் மீண்டும் புரட்சி வெடித்து ராணுவ ஆட்சி அமைக்கப்பட்டது. ஆங் சாங் சூகி கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் கடந்த 5 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார்.
தற்போது இவருடைய மகன் கிம் அரிஸ் தனது தாயான ஆங் சாங் சூகியை சந்திக்க மறுக்கப்படுவதாகவும், வீட்டுச்சிறையிலே அவர் இறந்துவிட்டதாக புகார் தெரிவித்தார்.
இதனை மியான்மரின் ராணுவ அரசாங்கம் மறுத்துள்ளது. அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அவருடைய தற்போதைய புகைப்படமோ, வீடியோவையோ வெளியிட்டு ஆதாரத்தை வழங்கவில்லை. இதனால் அவர் வீட்டுச்சிறையிலேயே உயிர் இழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.