உலகம்
null

ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம் - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

Published On 2025-06-22 06:14 IST   |   Update On 2025-06-22 06:23:00 IST
  • ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீதான எங்களின் வெற்றிகரமான தாக்குதலை முடித்துள்ளோம்
  • ஈரானின் மிகவும் மேம்பட்ட வசதியான ஃபோர்டோ, ஒரு மலைக்குள் கட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஈரானில் உள்ள பல அணுசக்தி தளங்கள் மீது குண்டுவீசியுள்ளதாக அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்றைய சமூக வலைதளப் பதிவில் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா ஈரானின் மீது நேரடி இராணுவத் தாக்குதலை நடத்தியது இதுவே முதல் முறையாகும். ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மோதல் வெடித்தது.

ஈரானின் அணு ஆயுதங்கள் தங்களுக்கு ஆபத்து என்பதால் முன்கூட்டியே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்நிலையில் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான இராணுவ மோதல் அமெரிக்காவின் தலையீடு மூலம் மேலும் அதிகரித்துள்ளது.

"ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), மற்றும் எஸ்ஃபஹான் (Esfahan) ஆகிய ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீதான எங்களின் வெற்றிகரமான தாக்குதலை முடித்துள்ளோம்" என்று டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

"அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன. முதன்மைத் தளமான ஃபோர்டோ மீது முழு அளவில் குண்டுகள் வீசப்பட்டன.

அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக நாடு திரும்புகின்றன. எங்களின் சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துக்கள். இதைச் செய்ய வேறு எந்த இராணுவமும் உலகில் இல்லை. இப்போது அமைதிக்கான நேரம்! இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் என்ன வகையான குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்று டிரம்ப் குறிப்பிடவில்லை. இருப்பினும் ஈரானின் மிகவும் மேம்பட்ட வசதியான ஃபோர்டோ, ஒரு மலைக்குள் கட்டப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் "பங்கர் பஸ்டர்" ஆயுதத்தால் மட்டுமே தாக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News