ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் வரலாற்றையே மாற்றும் - நேதன்யாகு நெகிழ்ச்சி!
- அமெரிக்கா உண்மையிலேயே நிகரற்றதாக இருந்துள்ளது. பூமியில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அது செய்துள்ளது
- அமெரிக்காவின் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் "பங்கர் பஸ்டர்" ஆயுதத்தால் தாக்கப்பட்டது.
ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அதிபர் டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
"வாழ்த்துக்கள், அதிபர் டிரம்ப். அமெரிக்காவின் வலிமையால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைக்கும் உங்கள் துணிச்சலான முடிவு வரலாற்றை மாற்றும்" என்று தனது உரையில் நேதன்யாகு நெகிழ்ந்தார்.
டிரம்ப் தலைமை "மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் செழிப்பு மற்றும் அமைதியான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் வரலாற்றின் ஒரு மையப்புள்ளியை உருவாக்கியுள்ளது" என்று கூறிய நேதன்யாகு தாக்குதல் முடிந்தவுடன் அதிபர் டிரம்பிடம் இருந்து தனக்கு உடனடியாக அழைப்பு வந்ததாக தெரிவித்தார்.
"ஆபரேஷன் ரைசிங் லயன், இஸ்ரேல் உண்மையிலேயே அற்புதமான காரியங்களைச் செய்துள்ளது. ஆனால் ஈரானின் அணுசக்தி வசதிகளுக்கு எதிரான இன்றைய நடவடிக்கையில், அமெரிக்கா உண்மையிலேயே நிகரற்றதாக இருந்துள்ளது. பூமியில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அது செய்துள்ளது," என்று நேதன்யாகு சிலாகித்தார்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலையில், அமெரிக்கா ஈரானின் ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), மற்றும் இஸ்ஃபஹான் (Isfahan) ஆகிய மூன்று அணுசக்தி வசதிகள் மீது தாக்குதல் நடத்தியது.
ஈரானின் மிகவும் மேம்பட்ட வசதியான ஃபோர்டோ, ஒரு மலைக்குள் கட்டப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் "பங்கர் பஸ்டர்" ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.