மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.. வெனிசுலாவிடமிருந்து அதிகளவில் எண்ணெய் வாங்கும் சீனா கருத்து
- அதிபர் மதுரோ கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான், சீனாவின் சிறப்புத் தூதரை அவர் சந்தித்துப் பேசினார்.
- வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியில் சீனா தோராயமாக 76–80% வாங்குகிறது.
அமெரிக்க படைகளால் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டு சீனா மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. இதனை கடுமையாக கண்டிக்கிறோம்.
ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது வெளிப்படையாக ராணுவத்தைப் பயன்படுத்துவதும், அந்த நாட்டு அதிபரை அராஜகமாகப் பிடிப்பதும் சர்வதேச சட்டங்களை படுமோசமாக மீறும் செயல்.
அமெரிக்காவின் இந்தச் செயல் ஐநா சபையின் அடிப்படை விதிகள் மற்றும் கொள்கைகளை மீறுவதாக உள்ளது.
மற்ற நாடுகளின் பாதுகாப்பையும், இறையாண்மையையும் அமெரிக்கா மதிப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது.
அமெரிக்காவின் இத்தகையநடவடிக்கைகள், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று சீனா சாடியுள்ளது.
அதிபர் மதுரோ கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான், சீனாவின் சிறப்புத் தூதரை அவர் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பில் சீனா-வெனிசுலா இடையிலான உறவு குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதல் சீனாவிற்குப் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணெய்:
உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு வெனிசுலாவில் உள்ளது. இது தோராயமாக 303 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெயைக் கொண்டுள்ளது. இது சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவை விட அதிகம்.
வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியில் சீனா தோராயமாக 76–80% வாங்குகிறது. நவம்பர் 2025 இல், சீனா ஒரு நாளைக்கு வெனிசுலாவிலிருந்து 613,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயை வாங்கியது.
வெனிசுலாவின் கனரக கச்சா எண்ணெய் சீன சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கது மற்றும் குறைந்த விலையில் கிடைக்கிறது.
வெனிசுலா சீனாவிடம் பல ஆண்டுகளாக வாங்கிய சுமார் 60 பில்லியன் டாலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது. இந்தக் கடன் எண்ணெய்க்கு ஈடாக திருப்பிச் செலுத்தப்படுகிறது. எனவே வெனிசுலாவின் ஸ்திரத்தன்மை சீனாவிற்கு மிகவும் முக்கியமானது.
இனி வெனிசுலாவின் எண்ணெய் இருப்பை அமெரிக்காவே நிர்வகிக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.