உலகம்

சின்னத்தை மாற்றிய டென்மார்க் மன்னர்.. கிரீன்லாந்தை கேட்கும் டிரம்ப்புக்கு தரமான பதிலடி

Published On 2025-01-07 15:20 IST   |   Update On 2025-01-07 15:21:00 IST
  • கிரீன்லாந்து அமெரிக்க உரிமை, அதன் மீதான முழுமையான கட்டுப்பாடு தேவை
  • டென்மார்க் ராஜ்ஜியத்திற்குள் இருக்கும் பகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான தனது விருப்பத்தை மன்னர் ஃபிரடெரிக் தெளிவாகக் காட்டியுள்ளார்.

ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் கிரீன்லாந்து என்ற தீவு உள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய தீவு என்ற பெருமை கொண்டது. இது டென்மார்க்கில் தன்னாட்சி அதிகாரம் பெற்றது.

22 லட்சம் (2.2 மில்லியன்) சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த தீவின் பெரும் பகுதி பனிபடர்ந்து இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும் வனமாக உள்ளது.

இங்கு துலே என்ற இடத்தில் அமெரிக்காவின் விமான படை தளம் உள்ளது. ராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர். எனவே விமான படை தளத்துக்கு அமெரிக்கா வாடகை செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுக்காக விலைக்கு வாங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் 2019 இல் அவர் அதிபராக இருந்தபோதே விருப்பம் தெரிவித்தார்.

அதற்கு டென்மார்க் கடும் கண்டனம் தெரிவித்தது. 2020 இல் நடந்த தேர்தலில் டிரம்ப் ஜோ பைடனுடன் ஆட்சியை பறிகொடுத்தார்.

ஆனால் 2024 நவம்பரில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். எனவே மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக கிரீன்லாந்து தீவை வாங்கும் பேச்சை கொளுத்தி போட்டுள்ளார்.

கிரீன்லாந்து அமெரிக்க உரிமை, அதன் மீதான முழுமையான கட்டுப்பாடு தேவை என்று தனக்கு சொந்தமாக ட்ரூத் சமூக வலைதளத்தில் கடந்த மாதம் டிரம்ப் பதிவிட்டார்.

இதற்கு கடும் கண்டம் தெரிவித்த டென்மார்க் பிரதமர் Múte Egede, கிரீன்லாந்து எங்களுடையது, நாங்கள் விற்பனைக்கு இல்லை, ஒருபோதும் விற்பனைக்கு வரமாட்டோம். சுதந்திரத்திற்கான நீண்ட போராட்டத்தை நாம் இழக்கக் கூடாது என்று தெரிவித்தார்

இந்நிலையில் தற்போது டென்மார்க் மன்னர் ஃபிரடெரிக் நாட்டின் கோட் ஆஃப் ஆர்ம்ஸ் சின்னத்தை மாற்றியமைத்து டிரம்புக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகளை பிரதிநிதித்துவப்படுத்த அரச கோட் ஆஃப் ஆர்ம்ஸ் சின்னத்தில் அவற்றில் குறியீடுகள் இடம்பெற்றுள்ளன.

புதிய சின்னத்தில் கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகளைக் குறிக்கும் ஒரு துருவ கரடி மற்றும் ஆடு [raam] குறியீடு இடம்பெற்றுள்ளது.

முன்னதாக டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடன் இடையே உள்ள கல்மார் யூனியன் மரபை குறிக்கும் விதமாக முந்தைய அரச கோட்கள் ஆப் ஆர்ம்ஸ் சின்னம் இருந்தத நிலையில் தற்போது அதை மாற்றி டென்மார்க் ராஜ்ஜியத்திற்குள் இருக்கும் பகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான தனது விருப்பத்தை மன்னர் ஃபிரடெரிக் தெளிவாகக் காட்டியுள்ளார்.

முன்னதாக அட்லான்டிக் – பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் பனாமா கால்வாயைப் பயன்படுத்துவதற்கான கப்பல் கட்டணச் செலவைக் குறைக்காவிட்டால், பனாமா கால்வாய் மீதான உரிமையை மீண்டும் அமெரிக்காவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

கனடாவை நாடு என்ற அந்தஸ்தில் இருந்து குறைத்து அமெரிக்காவின் மாகாணமாக மாற்றுவோம் என்றும் டிரம்ப் கூறி வருகிறார். இவ்வாறு வெளிநாடு அரசுகளில் டிரம்ப்பின் அதிக பிரசங்கித்தனம் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. 

Tags:    

Similar News