லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது கனடா அரசு!
- கனடா பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி அறிக்கை வெளியிட்டார்.
- இந்தக் கும்பலைச் சேர்ந்த கோல்டி டில்லான் என்பவர் பொறுப்பெற்றார்.
இந்தியாவில் இருந்து செயல்படும் சர்வதேச குற்றக் குழுவான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை கனடா அரசு பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
அந்நாட்டின் குற்றவியல் சட்டத்தின்படி இன்று (செப்டம்பர் 29) இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கனடா பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கையில், துப்பாக்கிச்சூடு, கொலைகள் போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல், அச்சத்தை பரப்புதல், வெளிநாட்டு வாழ் இந்திய சமூகத்தினரை குறிவைத்து மிரட்டி பணம் பறித்தல் ஆகியவை லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் முக்கிய செயல்பாடுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினால் இனி அந்நாட்டில் பிஷ்னோய் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், நிதிகளை முடக்கவும் கனடா அரசுக்கு அதிகாரம் கிடைக்கிறது.
முன்னதாக, கனடாவின் சர்ரேயில் உள்ள பாலிவுட் பிரபலம் கபில் ஷர்மாவின் கஃபே மீது இரண்டு முறை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு இந்தக் கும்பலைச் சேர்ந்த கோல்டி டில்லான் என்பவர் பொறுப்பேற்றதாகக் கூறப்பட்டது. கும்பலின் தலைவன் லாரான்ஸ் பிஷ்னோய் குஜராத் சபர்மதி சிறையில் இருந்தபடி தனது கும்பலை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.