டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திக்க இருக்கும் நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷியா
- ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சி.
- நாளை டிரம்ப்- ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.
ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். 20 அம்ச திட்டத்தை பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்கா- உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
நாளை (ஞாயிறு) உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை புளோரிடாவில் சந்தித்து பேச இருக்கிறார். அப்போது உக்ரைனின் பாதுகாப்பு உத்தரவாதம் குறித்து பேசுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் நகரை குறிவைத்து ரஷியா ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் குறைந்தது 8 பேராவது காயம் அடைந்திருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டினிப்ரோ மாவட்டத்தில் உள்ள 18-வது மாடி ரஷியாவின் தாக்குதலால் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக மீட்புப்பணியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். டார்னிட்சியா மாவட்டத்தில் உள்ள 24 மாடி கட்டிடமும் தாக்குதலுக்கு உள்ளானது. குறிப்பாக தொழில்துறை மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.