உலகம்

லாஸ் ஏஞ்செல்ஸில் தீவிரமடையும் போராட்டம் - பெண் பத்திரிகையாளர் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு - வீடியோ

Published On 2025-06-10 00:53 IST   |   Update On 2025-06-10 00:53:00 IST
  • சுமார் 2,000 போராட்டக்காரர்கள் நகர மையத்தில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • முகமூடிகளைப் பயன்படுத்துவதை டிரம்ப் தடை செய்துள்ளார்.

வெளிநாட்டவரை கைது செய்து நாடுகடத்தும் அமெரிக்காவின் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

போராட்டங்கள் நகரின் மையப்பகுதியை ஸ்தம்பிக்கச் செய்துள்ளன. நகர மையத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சோதனை மேற்கொள்ளும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) துறைக்கு எதிராக, சுமார் 2,000 போராட்டக்காரர்கள் நகர மையத்தில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல தானியங்கி கார்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லாஸ் ஏஞ்சல்ஸில் முகமூடி அணிந்த போராட்டக்காரர்களைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து, முகமூடிகளைப் பயன்படுத்துவதையும் டிரம்ப் தடை செய்துள்ளார்.

இதற்கிடையே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் போராட்டங்களைச் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய பெண் செய்தியாளர் ஒருவர் ரப்பர் தோட்டாவால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைன் நியூஸ் அமெரிக்க செய்தியாளர் லாரன் டோமாசி ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தச் சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தபோது அவரது காலில் ரப்பர் தோட்டா தாக்கியது. இந்தச் சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே, அங்கிருந்த போராட்டக்காரர்கள் டோமாசியிடம் சென்றனர். அவர் நலமாக இருப்பதாகப் பதிலளித்தார். சில போராட்டக்காரர்கள் காவல் நிலையத்தை நோக்கி, "நீங்கள் செய்தியாளரை சுட்டுக் கொன்றீர்கள்" என்று கோஷமிட்டனர்.

இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து நைன் நியூஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. லாரன் டோமாசி மற்றும் அவரது கேமராமேன் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் தொடர்ந்து தங்கள் செய்திகளை வெளியிடுவார்கள் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News