உலகம்

'டிரம்ப்பை மகிழ்விக்க ஈரானில் போராட்டம்' - பின்வாங்க மாட்டேன் என அலி காமேனி திட்டவட்டம்!

Published On 2026-01-10 12:39 IST   |   Update On 2026-01-10 12:39:00 IST
  • அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் வீழ்ச்சி அடைவார்.
  • சில போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் தயவைப் பெறுவதற்காகவே செயல்படுகிறார்கள்.

ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.

இதில் போராட்டக்காரர்கள் - பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இதில் 62 பேர் பலியாகி உள்ளனர். அங்கு போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

ஈரானில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால் அமெரிக்கா தலையிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இந்த நிலையில் டிரம்ப்புக்கு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முழு உலகத்தைப் பற்றியும் ஆணவத்துடன் தீர்ப்பளிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். உலகின் சர்வாதிகாரிகளும் ஆணவ ஆட்சியாளர்களும் தங்கள் ஆணவத்தின் உச்சத்தில் இருந்தபோது தங்கள் வீழ்ச்சியைக் கண்டனர். அதேபோல் டிரம்ப்பும் வீழ்ச்சி அடைவார். ஆணவத்துடன் ஆட்சி செய்யும் தலைவர்கள் தவிர்க்க முடியாத வீழ்ச்சியைச் சந்திப்பார்கள்.

ஈரானில் போராட்டத்தை அமெரிக்கா தூண்டிவிட்டு அமைதியின்மையை ஏற்படுத்தி வருகிறது.

சில போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் தயவைப் பெறுவதற்காகவே செயல்படுகிறார்கள். ஒரு சில நாசகாரர்கள் சொந்த நாட்டின் அரசு கட்டிடத்தை அழித்தனர். இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்க அதிபரை மகிழ்விப்பதற்காகவே செய்யப்பட்டன.

நீங்கள் யாராக இருந்தாலும் சரி ஒருமுறை நீங்கள் ஒரு வெளிநாட்டினருக்குக் கூலிக்கு வேலை செய்யத் தொடங்கிவிட்டால் அந்த தேசம் உங்களை நிராகரிக்கப்பட்டவராகக் கருதும். டிரம்பின் கைகள் ஈரானியர்களின் இரத்தத்தால் கறைபடிந்துள்ளது. இவ்விவகாரத்தில் ஈரான் ஒருபோதும் பின்வாங்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News