Partners in Crime: நண்பன் மல்லையாவின் 70வது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய லலித் மோடி - வீடியோ
- இதில் ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
- கடந்த மாதம் இங்கிலாந்து பிரதமர் இந்தியா வருகை தந்து மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் இவர்கள் இருவரையும் நாடுகடத்துவது தொடர்பான எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை
இந்திய சட்டங்களிலிருந்து தப்பிக்க லண்டனில் ஒளிந்து கொண்டிருக்கும் தொழிலதிபர்களான லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா பார்ட்டி, கொண்டாட்டம் என கூத்தடிக்கும் வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.
பணமோசடி உட்பட பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு லலித் மோடி 2010 முதல் லண்டனில் வசித்து வருகிறார்.
மறுபுறம், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி கடன்களை ஏய்ப்பு செய்து லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
இந்நிலையில் நேற்று விஜய் மல்லையா தனது 70 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்காக தனது வீட்டில் லலித் மோடி பிரமாண்ட பார்ட்டி கொடுத்துள்ளார்.
இதில் ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். மேலும் இதில் லலித் மோடி, விஜய் மல்லையா இருவரும் நடனமாடி மகிழ்ந்தனர். இதன் வீடியோவை லலித் மோடி தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் தனது 63வது பிறந்தநாளை கொண்டாடிய லலித் மோடி லண்டனின் மேஃபேரில் உள்ள விலையுயர்ந்த மடாக்ஸ் கிளப்பில் பார்ட்டி வைத்தார்.
இந்த கிளப்பில் ஒரு மேஜையை புக்கிங் செய்ய குறைந்தபட்சம் ஆயிரம் பவுண்டுகள் (சுமார் ரூ. 1.18 லட்சம்) கட்டணம் ஆகும். இந்த பார்ட்டியின் வீடியோவையும் அப்போது பகிர்ந்து கொண்டார்.
கடந்த மாதம் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியா வருகை தந்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் இவர்கள் இருவரையும் நாடுகடத்துவது தொடர்பான எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.