மீண்டும் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் செல்லும் பாகிஸ்தான் ராணுவ தளபதி..
- கடந்த ஜூன் மாதம் 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றபோது, அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அவருக்கு விருந்தளித்தார்.
- பாகிஸ்தானுக்கு வர்த்தக முன்னுரிமை அளிப்பதாக உறுதியளித்தார்.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.
ஒரு புறம் இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்படும் நேரத்தில், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மீண்டும் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் செல்ல தயாராகி வருகிறார்.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி, ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக இந்த வாரம் அமெரிக்காவிற்கு செல்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூன் மாதம் 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றபோது, அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அவருக்கு விருந்தளித்தார்.
அந்த பயணத்தின் போது, பாகிஸ்தானுக்கு வர்த்தக முன்னுரிமை அளிப்பதாகவும், அதன் எண்ணெய் இருப்புக்களை பிரித்தெடுப்பது குறித்து ஆராய்வதாகவும் டிரம்ப் உறுதியளித்தார். இந்நிலையில் இந்த முறை அமெரிக்க பயணத்தின்போது அசிம் முனீர் அரசின் உயர்மட்ட தலைவர்களை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.