மன்னராட்சிக்கு ஆதரவாக போராட்டம்: நேபாள முன்னாள் மன்னருக்கு அபராதம்
- நேபாளத்தில் மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர்.
- இந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 110 பேருக்கு காயம் ஏற்பட்டது.
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் மன்னராட்சிக்கு ஆதரவான போராட்டங்களின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காக, முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதன்மூலம் 80 சதவீத இந்துக்களை கொண்ட நேபாளம் மன்னராட்சியில் இருந்து மதச்சார்பற்ற, கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசாக மாறியது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து முடியாட்சியை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.
இதனையடுத்து முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷாவின் ஆதரவாளர்கள் மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர். போலீசார் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது, போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். இந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 110 பேருக்கு காயம் ஏற்பட்டது.
முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் அழைப்பின் பேரில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து காத்மாண்டு நகர மேயர் முன்னாள் மன்னருக்கு நேபாள ரூபாய் 7,93,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.