உலகம்

சொந்த நகரத்தின் மீதே குண்டு வீசிய ரஷிய விமானங்கள்- தவறுதலாக நடந்து விட்டதாக ராணுவம் அறிவிப்பு

Published On 2023-04-21 10:54 IST   |   Update On 2023-04-21 10:54:00 IST
  • சுகோய்-34 வகை விமானம் ஒன்று உக்ரைன் எல்லைக்கு தாக்குதல் நடத்த புறப்பட்டு சென்றது.
  • விமானத்தில் இருந்து சீறி பாய்ந்த குண்டுகள் உக்ரைனுக்கு பதில் உக்ரைன் எல்லையில் உள்ள ரஷிய நகரமான பெல்கோரேட் நகர் மீது விழுந்தது.

மாஸ்கோ:

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.

உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு கடந்த பின்னரும் இன்னும் ஓயவில்லை. இப்போதும் தினம், தினம் தாக்குதல் நடந்த வண்ணம் உள்ளது.

நேற்று உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷியாவின் அதிநவீன போர் விமானங்கள் சீறி பாய்ந்தன. உக்ரைன் எல்லையில் குண்டு வீசுவதற்காக இந்த விமானங்கள் பறந்து சென்றன.

இதில் சுகோய்-34 வகை விமானம் ஒன்று உக்ரைன் எல்லைக்கு தாக்குதல் நடத்த புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் உக்ரைன் எல்லையை சென்றடைந்தது.

எல்லையை நெருங்கியதும் விமானம் தாக்குதலில் ஈடுபட்டது. ஆனால் விமானத்தில் இருந்து சீறி பாய்ந்த குண்டுகள் உக்ரைனுக்கு பதில் உக்ரைன் எல்லையில் உள்ள ரஷிய நகரமான பெல்கோரேட் நகர் மீது விழுந்தது.

இந்த தாக்குதலில் பெல்கோரேட் நகரின் வீதிகளில் சுமார் 20 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. பல கட்டிடங்கள், வீடுகள் இடிந்தது.

மேலும் தெருக்களில் நடந்து சென்ற 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் பற்றி அறிந்ததும் ரஷிய ராணுவ அதிகாரிகள் விரைந்து சென்று விசாரித்தனர்.

இதில் ரஷிய நகர் மீது தவறுதலாக தாக்குதல் நடந்து விட்டது தெரியவந்தது. இதனை ரஷிய ராணுவ உயர் அதிகாரிகள் அதிகாரபூர்வமாக தெரிவித்தனர்.

மேலும் தவறு நடந்தது எப்படி? போர் விமானத்தின் குறி தவறியது ஏன்? என்பது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Tags:    

Similar News