உலகம்
null

லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

Published On 2022-06-23 12:06 GMT   |   Update On 2022-07-08 01:16 GMT
  • உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 5வது மாதமாக நீடிக்கிறது.
  • ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள மெலிடோபோல் நகரில் உக்ரைன் படைகள் இன்று உக்கிரமான தாக்குதலை நடத்தி உள்ளன.


2022-07-08 01:16 GMT

உக்ரைனுடன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியா பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் ஐரோப்பிய நாடுகள், உக்ரைன் எங்களுடன் போரிட வேண்டும் என்பதையே விரும்புகின்றன என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். போர் எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, அவ்வளவு காலம் எங்களுடன் ஒப்பந்தம் செய்வதும் அவர்களுக்கு கடினமாக இருக்கும் என்பதை ஐரோப்பிய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் புதின் குறிப்பிட்டுள்ளார்.

2022-07-08 01:15 GMT

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், 39 கவச போர் வாகனங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் என்றும், மீதமுள்ள 360 வாகனங்கள் அடுத்த சில மாதங்களில் விநியோகிக்கப்படும் என்று கனடா பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மாட்ரிட்டில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்திருந்த உக்ரைனுக்கான ராணுவ ஆதர திட்டத்தின் ஒருபகுதியாக இந்த வாகனங்கள் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022-07-07 14:49 GMT

கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்க் நகரின் மையப்பகுதியில் இன்று ரஷிய படைகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில், உயிரிழப்புகள் ஏற்பட்டதாக நகர மேயர் கூறி உள்ளார். ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்களை அவர் வெளியிடவில்லை. அதேசமயம், பொதுமக்கள் வெளியில் வராமல், அரசின் பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

2022-07-07 14:42 GMT

பாம்பு தீவின் மீது ரஷியா விமான தாக்குதல் நடத்தி உள்ளது. உக்ரைன் படைகள் பாம்பு தீவில் தங்கள் கொடியை உயர்த்தியதாகக் கூறிய சிறிது நேரத்தில், இரவோடு இரவாக ரஷிய போர் விமானம் தாக்கியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் பீரங்கி படைகளின் கடும் தாக்குதலைத் தொடர்ந்து பாம்பு தீவில் இருந்து ரஷிய படைகள் பின்வாங்கியதையடுத்து, உக்ரைனின் மூன்று வீரர்கள் அங்கு உக்ரைன் கொடியை உயர்த்தினர். இது குறித்த வீடியோவை உக்ரைன் அதிபரின் தலைமை அதிகாரி டெலிகிராமில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2022-07-07 14:36 GMT

ரஷிய எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த வகை செய்யும் சட்டம், பின்லாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ரஷியாவுடனான நாட்டின் எல்லையில் தடைகளை அனுமதிக்க இந்த சட்டம் அனுமதி அளிக்கிறது. மேலும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் அடைக்கலம் வேண்டி மக்கள் வரும் பகுதிகளில் 1,300 கிமீ எல்லையை மூடுவதற்கும் இந்த சட்டம் உதவுகிறது.

நேட்டோ அமைப்பில் சேரும் பின்லாந்தின் திட்டங்களுக்கு ரஷியா பதிலடி கொடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், பின்லாந்து இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. 

2022-07-07 09:34 GMT

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு பதிலளிப்பதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தோல்வியடைந்துள்ளது என்று நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார். மாஸ்கோவின் பங்கை "தார்மீக ரீதியாக திவாலானது" என்று அவர் விவரித்தார். பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் வீட்டோ அதிகாரங்களுக்கு எதிராக ஆர்டெர்ன் நீண்ட காலமாக வாதிட்டு வருகிறார். அமைப்பு சீர்திருத்தத்திற்கான தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்தினார்.

2022-07-07 00:26 GMT

உக்ரைனின் கிழக்கில் உள்ள லூகன்ஸ் மாகாணத்தை ரஷிய ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து லூகன்ஸ் மாகாணத்திற்கு அடுத்த நகரங்களில் ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு நகரமான டோனெட்க்ஸ் மாகாணத்தில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் 8 உக்ரைன் பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். உக்ரைன் நடத்திய பதில தாக்குதலில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

2022-07-06 21:06 GMT

உக்ரைனின் லூகன்ஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான லிசிசண்ஸ்க் நகரையும் ரஷிய ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து, லூகன்ஸ் மாகாணத்திற்கு அடுத்த நகரங்களிலும் ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், லூகன்ஸ் மாகாணத்திற்கு அடுத்த பகுதியான டோனெட்க்ஸ் மாகாணத்தில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற அம்மாகாண கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

2022-07-06 17:06 GMT

உக்ரைன் படைகள், இதுவரை டோனெட்ஸ்க் பிராந்தியத்தின் வடக்கில் ரஷியாவின் முயற்சியை முறியடித்துள்ளது. ஆனால் ஸ்லோவியன்ஸ்க் நகரம் மற்றும் அங்கு மக்கள் வசிக்கும் பிற பகுதிகளில் பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதல் தொடர்வதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2022-07-06 17:06 GMT

உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் மாடல் அழகி தலிதோ டோ வாலே (வயது 39), ரஷியாவின் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற 39 வயதான அவர், கார்கிவ் நகரில் பதுங்கு குழியில் இருந்தபோது ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் பலியானதாக கூறப்படுகிறது. ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராக போரிட்டு அதனை தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட தலிதோ டோ வாலே, கடந்த 3 வாரங்களாக ரஷியா - உக்ரைன் போர் தொடர்பாகவும் வீடியோ வெளியிட்டு வந்தார்.

Similar News