உலகம்

அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் கைது பற்றி ஐ.நா. கருத்து

Published On 2024-03-30 03:20 GMT   |   Update On 2024-03-30 03:20 GMT
  • ஜெர்மனி தெரிவித்த கருத்துக்காக, அந்நாட்டு தூதரக அதிகாரியையும் அழைத்து கண்டனம் தெரிவித்தது.
  • அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் முடக்கம் ஆகிய பிரச்சனைகள் பற்றி நிருபர்கள் கேட்டனர்.

நியூயார்க்:

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

அதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் 3 நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்தார். இந்தியாவில் உள்ள நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

அமெரிக்காவின் தலையீடு தேவையற்றது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரியை நேரில் அழைத்து எதிர்ப்பு தெரிவித்தது.

அதுபோல் ஏற்கனவே ஜெர்மனி தெரிவித்த கருத்துக்காக, அந்நாட்டு தூதரக அதிகாரியையும் அழைத்து கண்டனம் தெரிவித்தது.

இருப்பினும், மீண்டும் அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் இப்பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், ஐ.நா.வும் இப்பிரச்சனை பற்றி கருத்து கூறியுள்ளது. ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரசின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் அன்றாட நிருபர்கள் சந்திப்பை நடத்தினார்.

அப்போது, அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் முடக்கம் ஆகிய பிரச்சனைகள் பற்றி நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது:-

தேர்தல் நடக்கும் எந்த நாட்டையும் போலவே, இந்தியாவிலும் ஒவ்வொருவரது அரசியல் உரிமைகளும், சிவில் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று பெரிதும் நம்புகிறோம்.

ஒவ்வொருவரும் நேர்மையான, சுதந்திரமான சூழ்நிலையில் வாக்களிக்க முடியும் என்றும் நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News