காசா முனையில் ராணுவ தாக்குதலை விரிவுப்படுத்தி வருகிறோம்: இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்
- பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை நசுக்கி, அப்பகுதியை க்ளீன் செய்ய தாக்குதல் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
- அதிக இடங்களை கைப்பற்றி இஸ்ரேல் நாட்டிற்கான பாதுகாப்பு பகுதியாக சேர்க்கப்படும்.
இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். அத்துடன் 250-க்கும் அதிகமானோரை பணயக் கைதிகளை பிடித்துச் சென்றனர். இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா முனை மீது தாக்குதல் நடத்தியது.
இதனால் இஸ்ரேலுக்கும்- ஹமாஸ்க்கும் இடையில் போர் மூண்டது. அடுத்த மாதம் (2023 நவம்பர்) பணயக் கைதிகளை விடுவிக்க இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றம்சாட்டி மீண்டும் தாக்குதலை தொடங்கியது.
அதன்பின் சுமார் 13 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஏழு வார ஒப்பந்தத்தில் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
ஏழு வாரத்திற்குப் பிறகு போர் நிறுத்தம் நீட்டிக்கப்படவில்லை. இதனால் மார்ச் தொடக்கத்தில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. காசாவுக்கு செல்லும மனிதாபிமான உதவிகளை நிறுத்தியது.
இந்த நிலையில் காசா முனையில் ராணுவ தாக்குதலை விரிவுப்படுத்தி கொண்டிக்கிறோம் என இஸ்ரேல் ராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கூறுகையில் "பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை நசுக்கி, அப்பகுதியை க்ளீன் செய்ய பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. அதிக இடங்களை கைப்பற்றி இஸ்ரேல் நாட்டிற்கான பாதுகாப்பு பகுதியாக சேர்க்கப்படும். காசா குடியிருப்புவாசிகள் ஹமாஸ் அமைப்பினரை வெளிப்படுத்தி, அனைத்து பணயக் கைதிகளையும் திருப்பு அனுப்ப வேண்டும்" என்றார்.
ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 59 பணயக் கைதிகள் உள்ளனர். அவர்களில் 24 பேர் உயிரிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
பாலஸ்தீனத்தின் தெற்கு நகரான கான் யூனிஸில் இஸ்ரேல் நேற்று இரவில் இருந்து நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.