உலகம்

இஸ்ரேல் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் - ஈரான் எச்சரிக்கை

Published On 2025-06-13 11:37 IST   |   Update On 2025-06-13 11:56:00 IST
  • இரு நாட்டு வான்வெளிகளும் மூடப்பட்டுள்ளன. இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
  • மூத்த இராணுவ ஜெனரல் முகமது பகேரி கொல்லப்பட்டதாக வெளியான செய்திகளை ஈரான் மறுத்துள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ராம் உள்ளிட்ட பகுதிகள் மீது இன்று அதிகாலை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் தங்களை தாக்கும் என்று உளவுத்துறை தகவல் கிடைத்தாகவும் அவ்வாறு இஸ்ரேல் தாக்கினால் அந்நாட்டின் ரகசிய அணுசக்தி தளங்களை குறிவைத்து அழிப்போம் என்றும் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) கடந்த திங்கள்கிழமை தெரிவித்தது.

இந்நிலையில் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். தெஹ்ரானின் குடியிருப்பு பகுதிகளில் பகுதியளவு இடிந்து விழுந்த கட்டிடங்களின் படங்கள் வெளியாகி வருகின்றன.

ஆபரேஷன் ரைசிங் லயன் என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதலின் கீழ் ஈரானிய இராணுவத் தளங்களையும் தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது

இந்த சூழலில், தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பெரும் விலை கொடுக்க நேரிடும் என்று ஈரானிய ஆயுதப்படை செய்தித் தொடர்பாளர் அபோல்பஸ்ல் ஷேகார்ச்சி எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்கை மீண்டும் ஒரு போர் போன்ற அச்ச நிலைக்குத் தள்ளுகிறது.

இதற்கிடையில் இரு நாட்டு வான்வெளிகளும் மூடப்பட்டுள்ளன. இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உயர் ஆலோசகர் அலி ஷம்கானியும் இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், மூத்த இராணுவ ஜெனரல் முகமது பகேரி கொல்லப்பட்டதாக வெளியான செய்திகளை ஈரான் மறுத்துள்ளது. பகேரி தற்போது போர் அறையில் இருப்பதாகவும், அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் ஈரானிய அரசு ஊடகமான ஐஆர்என்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமல் இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்க முடிவு செய்யக்கூடும் என்று பல நாட்களாக அமெரிக்க உளவுத்துறை முன்பு செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News