உலகம்

பதுங்கு குழியில் ஈரான் உயர் தலைவர் காமேனி.. தனது பதவிக்கு 3 பேரின் பெயர்கள் பரிந்துரை

Published On 2025-06-22 09:31 IST   |   Update On 2025-06-22 09:31:00 IST
  • விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்ட சூழலில் காமேனி பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்துள்ளார்.
  • மறைந்த அதிபர் இப்ராஹிம் ரைசி கமேனியின் வாரிசு என்று கூறப்பட்டது.

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் சூழலில் அந்நாட்டின் உயர் தலைவர் அயதுல்லா காமேனி பாதுகாப்பாக ஒரு ரகசிய நிலத்தடி பதுங்கு குழிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அனைத்து வகையான மின்னணு தகவல்தொடர்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நம்பகமான உதவியாளர் மூலம் மட்டுமே இராணுவத் தளபதிகளுக்கு செய்திகள் அனுப்பப்படுவதாகவும் தெரிகிறது.

காமேனி இன்னும் இந்த உலகில் இருக்க கூடாது என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சமீபத்தில் கூறியிருந்தார். மேலும் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் சில விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்ட சூழலில் காமேனி பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இந்த சூழலில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தனக்குப் பின் உயர் தலைவர் பதவிக்கு மூன்று மூத்த மதத் தலைவர்களின் பெயர்களை காமேனி பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் அந்த பட்டியலில் அவரின் மகன் பெயர் இடம்பெறவில்லை. கடந்த காலத்தில், மறைந்த அதிபர் இப்ராஹிம் ரைசி கமேனியின் வாரிசு என்று கூறப்பட்டது. ஆனால் ஹெலிகாப்டர் விபத்தில் அவர் இறந்தது அந்த ஊகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இப்போது, காமெனியின் சொந்த மகன், திரைக்குப் பின்னால் ஒரு முக்கிய நபராகக் கருதப்படும் மோஜ்தபாவும் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News