நான் கண்ணியமான மனிதன்.. சட்டவிரோதமாக என்னைக் கடத்தி வந்துள்ளனர் - நியூயார்க் நீதிமன்றத்தில் மதுரோ வாதம்
- நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டைன் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
- மதுரோவின் மனைவி அட்ரியானாவும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்து அமெரிக்கா அழைத்து வந்தது.
வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.
இதற்கிடையே வெனிசுலா உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
அமெரிக்கா அழைத்துவரப்பட்ட மதுரோ மற்றும் அவரது மனைவி மீது போதைப்பொருள் பயங்கரவாதம், கோகயின் இறக்குமதி செய்வதற்கான சதி, இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவு ஏற்படுத்தும் சாதனங்களை வைத்திருத்தல் ஆகிய நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நியூயார்க் கோர்ட்டில் நிகோலஸ் மதுரோ மீதான விசாரணை நடைபெற்றது. நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டைன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. கடும் பாதுகாப்புக்கு மத்தியில் மதுரோவும் அவரது மனைவியும் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டனர்.
நீதிமன்றத்தில் பேசிய மதுரோ, தான் நிரபராதி என்றும் குற்றமற்றவன் என்றும் கூறி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
தொடர்ந்து, நான் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் அதிபர். சர்வதேச சட்டங்களை மீறி, காரகஸில் உள்ள எனது இல்லத்திலேயே வைத்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டேன்.
என்னை ஒரு பயங்கரவாதியைப் போலவும், போதைப்பொருள் கடத்தல்காரனைப் போலவும் சித்தரிக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. ஆனால் நான் ஒரு கண்ணியமான மனிதன்.
அமெரிக்கா தனது அரசியல் லாபத்திற்காகவும், வெனிசுலாவின் இயற்கை வளங்களைக் கைப்பற்றவும் என் மீது இத்தகைய பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது" என்று தெரிவித்தார். மேலும் தானே இன்னும் வெனிசுலாவின் அதிபராக இருக்கிறேன் என மதுரோ நீதிமன்றத்தில் பல முறை வலியுறுத்தினார்.
மேலும் மதுரோவின் மனைவி அட்ரியானாவும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். வழக்கின் விசாரணை மார்ச் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.