தென் கொரிய விமான விபத்து - இருவர் மட்டும் உயிர் தப்பியது எப்படி?
- தென் கொரிய விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி விபத்தில் சிக்கியது.
- விமான விபத்தில் 179 பயணிகள் உயிரிழந்தனர்.
தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி தரையில் மோதியதில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 179 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இது தென் கொரியாவில் ஏற்பட்ட மிக கோரமான விமான விபத்தாக மாறி இருக்கிறது.
தாய்லாந்தில் இருந்து தென் கொரியாவுக்கு திரும்பிய இந்த விமானத்தில் 175 பயணிகள், ஆறு பணியாளர்கள் உள்பட மொத்தம் 181 பேர் இருந்தனர். இந்த விமானம் விபத்தில் சிக்கியதில் 179 பேர் உயிரிழந்த நிலையில், இருவர் மட்டும் உயிர்பிழைத்தனர். விபத்தில் சிக்கிய இருவர் மட்டும் உயிர் பிழைத்தது எப்படி என தெரியவந்துள்ளது.
அதன்படி விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த இருவர் விமானத்தின் கடைசி பகுதியில் அமர்ந்து இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியிலான விமானங்களின் கடைசி பகுதி மிகவும் பாதுகாப்பான ஒன்றாக அறியப்படுகிறது.
2015 ஆம் ஆண்டு டைம் இதழ் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் விபத்தில் சிக்கும் விமானங்களில் மிகவும் பாதுகாப்பான பகுதியாக அதன் பின்புறம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தென் கொரிய விமான விபத்தில் உயிர்பிழைத்த இருவர்- 32 வயதான லீ மற்றும் 25 வயதான வொன் ஆவர்.