உலகம்

"ஊழல்" பார்ட் 2: இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

Published On 2025-12-20 12:52 IST   |   Update On 2025-12-20 12:52:00 IST
  • நம்பிக்கை மோசடி செய்ததற்காக 7 ஆண்டுகள், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள், ஆக மொத்தம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை
  • ஏற்கனவே "தோஷகானா 1" வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தோஷகானா பார்ட் 2 வழக்கில் தண்டனை கிடைத்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு மற்றுமொரு ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி பெற்ற பரிசுகளில் ஊழல் செய்ததாக வழக்கு.

 இந்த வழக்கு 'தோஷகானா 2' என்று அழைக்கப்படுகிறது. அரசு கருவூல பரிசுகள் தோஷகானா என்று அளிக்கப்படுவதால் இந்த பெயர் 

2021-ம் ஆண்டு சவுதி அரேபியாவிடமிருந்து இம்ரான் கான் தம்பதி பரிசாக பெற்ற விலைமதிப்பற்ற நகைகள், வைரங்கள் மற்றும் ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட அரசு பரிசுகளை, அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் மோசடி செய்தததே இவர்கள் மீதான குற்றச்சாட்டு. 

சுமார் 10.9 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை அவர்கள் கையாடல் செய்ததாக புலனாய்வு அமைப்பு தெரிவித்தது.

இந்நிலையில், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.

அதன்படி நம்பிக்கை மோசடி செய்ததற்காக 7 ஆண்டுகள், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள், ஆக மொத்தம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தலா 1.64 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதேபோல் மற்ற சில பரிசுகளை கையாடல் செய்ததாக "தோஷகானா 1" வழக்கில் தண்டனை பெற்றுள்ள இம்ரான் கானுக்கு இந்த தோஷகானா பார்ட் 2 வழக்கில் 17 ஆண்டு தண்டனை பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதுமட்டுமின்றி பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்று இம்ரான் கான் ஏற்கனவே அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அண்மையில் உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்தது. ஆனால் சிறை நிர்வாகம் அதை மறுத்தது.

இதற்கிடையே இம்ரான் கான் மனைவி புஷ்ரா பீபி ஏற்கனவே இந்த 'தோஷகானா 2' வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், தற்போது அவருக்கு 17 ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்ரான் கானின் பிடிஐ கட்சி இத்தீர்ப்பை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், சட்டத்தை கேலி செய்யும் செயல் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.  

Tags:    

Similar News