அமெரிக்காவில் துணிகரம்: இந்திய பல் மருத்துவ மாணவர் படுகொலை
- டல்லாஸ் மாகாணத்தில் எரிவாயு நிலையம் ஒன்றில் பகுதி நேர பணியாளராக வேலை செய்தார்.
- பணியில் இருந்த அவரை நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினார்.
வாஷிங்டன்:
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் போலே (27). பல் மருத்துவத்தில் அறுவை சிகிச்சை படிப்பை முடித்து விட்டு, மேல் படிப்புக்காக 2023-ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். முதுநிலை படிப்பில் சேர்ந்து படித்து வந்த அவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதனை முடித்துள்ளார்.
நிரந்தர வேலை தேடி வந்த அவர், அது கிடைக்கும் வரை அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் உள்ள எரிவாயு நிலையம் ஒன்றில் பகுதி நேர பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.
இதற்கிடையே, பணியில் இருந்த அவரை நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினார். இதில், படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இச்சம்பவம் தெலுங்கானாவில் உள்ள அவருடைய பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி, சந்திரசேகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியதுடன், அவருடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அரசு சார்பில் அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என உறுதி கூறினார்.
இந்நிலையில், இந்திய மாணவர் படுகொலைக்கு இரங்கல் தெரிவித்த ஹூஸ்டன் இந்திய தூதரகம், அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்தது.