உலகம்

ஹார்முஸ் ஜலசந்திக்கு போர்க் கப்பல்களை அனுப்புங்கள்: உலக நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தல்

Published On 2026-03-14 21:41 IST   |   Update On 2026-03-14 21:41:00 IST
  • ஈரானின் ராணுவத் திறன் 100 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளது.
  • இருந்தாலும் ஒன்றிரண்டு டிரோன்களை ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் செலுத்த வாய்ப்புள்ளது.

உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயு சப்ளை செய்யும் முக்கிய நீர் போக்குவரத்து வழியாக ஹார்முஸ் ஜலசந்தி விளங்குகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியதால், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது.

இந்த வழியாக செல்லும் கப்பல்களுக்கு கடலுக்குள் சமாதிதான் என எச்சரித்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல பாதுகாப்பு கப்பல்கள் பயன்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து, பாதுகாப்பாக கப்பல்கள் செல்ல போர்க் கப்பல்களை அனுப்புங்கள் என உலக நாடுகளை டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் கூறியதாவது:-

ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி மூடல் முயற்சியால் பாதிக்கப்பட்ட நாடுகள், அமெரிக்காவுடன் இணைந்து ஜலசந்தியை திறந்து, பாதுகாப்பாக எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல போர்க்கப்பல்களை அனுப்பி வையுங்கள்.

ஈரானின் ராணுவத் திறன் 100 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஈரான் எவ்வளவு மோசமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், இந்த நீர்வழிப்பாதையின் ஏதேனும் ஒரு பகுதியில் ஒன்று அல்லது இரண்டு ஆளில்லா விமானங்களை அனுப்புவதோ, ஒரு கண்ணிவெடியைப் பதிப்பதோ அல்லது ஒரு குறுகிய தூர ஏவுகணையை ஏவுவதோ ஈரானுக்கு மிகவும் எளிதானது.

இந்த செயற்கையான தடையால் பாதிக்கப்பட்ட சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகள், அப்பகுதிக்கு கப்பல்களை அனுப்பி முற்றிலுமாகத் தலை துண்டிக்கப்பட்ட ஒரு தேசத்தால் ஹார்முஸ் ஜலசந்தி இனி அச்சுறுத்தலாக அமையாதவாறு செய்வார்கள் என்று நம்புவோம்.

இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News