Oil Ships | எதிரி நாட்டு கப்பல்களுக்கு மட்டுமே., ஹார்முஸ் ஜலசந்தி குறித்து ஈரான் வெளியிட்ட புது அப்டேட்..!
- ஹார்முஸ் ஜலசந்தியை நாங்கள் மூடவில்லை. உண்மையில் அந்த ஜலசந்தி திறந்தே இருக்கிறது.
- எங்கள் எதிரிகளுக்கு சொந்தமான கப்பல்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து கடந்த 28-ந்தேதி போரை தொடங்கின. இதில் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கி வருகிறது.
மேலும் உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பாதையாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது. இதனால் பாரசீக வளைகுடாவில் ஏராளமான கப்பல்கள் தங்களது பயணத்தை தொடர முடியாமல் தவித்து வருகின்றன.
இதையடுத்து கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகம் உலகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை தடுக்கக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்து வருகிறது.
இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அளிக்கும் என்றும் பாதிக்கப்பட்ட நாடுகள் தங்களது போர்க்கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பதற்காக அனுப்ப வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க எதிரி நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி கிடையாது என்று ஈரான் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி கூறியதாவது:-
ஹார்முஸ் ஜலசந்தியை நாங்கள் மூடவில்லை. உண்மையில் அந்த ஜலசந்தி திறந்தே இருக்கிறது. இது எங்கள் எதிரிகளுக்கு சொந்தமான கப்பல்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளுக்கு மட்டுமே இந்த முக்கிய கடல் பாதை மூடப்பட்டுள்ளது. மற்ற நாடுகளின் கப்பல்கள் சுதந்திரமாக கடந்து செல்லலாம்.
பாதுகாப்பு கவலைகள் காரணமாக பல கப்பல்கள் இந்த பாதையைப் பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
இவ்வாறு அராக்சி தெரிவித்தார்.
அதேபோல் ஈரான் புரட்சிகர காவல்படை கடற்படையின் தளபதி அலிரேசா டாங்சிரி கூறும்போது, ஹார்முஸ் ஜலசந்தி ராணுவ ரீதியாக தடுக்கப்படவில்லை. அது வெறும் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஈரானின் கடற்படையை அழிப்பது அல்லது எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பை வழங்குவது பற்றிய அமெரிக்காவின் கூற்றுகள் தவறானவை ஆகும் என்றார்.
நேற்று இந்தியாவை நோக்கி வந்த 2 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் இன்று 16-வது நாளாக நீடிக்கிறது. ஈரான் மீது தொடர்ந்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. அதேபோல் இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசியது. இதில் டெல்அவிவ் நகரை ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை தாக்கியது.