உலகம்

மாஸ்கோ வந்தடைந்தார் சீன அதிபர்... புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை

Published On 2023-03-20 12:00 GMT   |   Update On 2023-03-20 12:00 GMT
  • சீன அரசாங்கம் ரஷியாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது
  • புதினுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஜி ஜின்பிங்கின் பயணம் அமைந்திருப்பதாக பேசப்படுகிறது.

மாஸ்கோ:

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக இன்று ரஷியா வந்தடைந்தார். தலைநகர் மாஸ்கோவில் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து புதினுக்கு ஜி ஜின்பிங் ஆலோசனைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் போர் விஷயத்தில் சீனா நடுநிலை வகிப்பதாக கூறுகிறது. ஆனால் சீன அரசாங்கம் ரஷியாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் புதினுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஜி ஜின்பிங்கின் இந்த மூன்று நாள் பயணம் அமைந்திருப்பதாக பேசப்படுகிறது.

அனைத்து நாடுகளின் இறையாண்மைக்கு மரியாதை அளிப்பது, சீனாவின் 12 அம்ச யோசனை மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் பற்றிய சீனாவின் கருத்துக்களை புதின் வரவேற்றார். மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்குவதில் விருப்பம் காட்டுவதாக சீனாவின் கருத்துக்கள் இருப்பதாக அவர் கூறினார். சீன-ரஷிய உறவுகள் உயர்ந்த நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு 23-ம் தேதி நாடு திரும்புகிறார்.

Tags:    

Similar News