இந்தியாவுடனான போரை நிறுத்த சீனா மத்தியஸ்தம் செய்தது- பாகிஸ்தான்
- டிரம்ப்பை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்ததாக சீனா தெரிவித்தது.
- சீனா தெரிவித்த கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கடந்த மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலை வர்த்தக காரணம் காட்டி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார்.
அதை திட்டவட்டமாக மறுத்த இந்தியா, பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம் என்றும் இதில் 3-ம் தரப்பு தலையீடு இல்லை என்றும் தெரிவித்தது. ஆனால் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்தார் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.
இதற்கிடையே டிரம்ப்பை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்ததாக சீனா தெரிவித்தது.
இதுதொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கூறும்போது, பல நாடுகள் இடையேயான மோதலை தீர்க்க நாங்கள் கவனம் செலுத்தினோம். வடக்கு மியான்மர், ஈரான் அணுசக்திப் பிரச்சினை மற்றும் இந்தியா-பாகிஸ் தான் இடையேயான மோதல், பாலஸ்தீனம்- இஸ்ரேல் பிரச்சினைகள், கம்போடியா-தாய்லாந்துக்கு இடையிலான மோதல் ஆகியவற்றில் மத்தியஸ்தம் செய்தோம் என்றார்.
சீனா தெரிவித்த கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த நிலையில் போரை நிறுத்த சீனா மத்தியஸ்தம் செய்ததாக பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாகீர் அந்த்ராபி கூறியதாவது:-
இந்தியாவுடனான மோதலின்போது சீன தலைவர்கள் பாகிஸ்தான் தலைமையுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். மே 6 முதல் 10-ம் தேதி வரையிலான நாட்களில் அல்லது அதற்கு முன்னரும், பின்னரும் இந்திய தலைமையுடனும் சீன தலைவர்கள் சில தொடர்புகளை ஏற்படுத்தினர்.
மிகவும் நேர்மறையான தூதரக பரிமாற்றங்களால் வகைப்படுத்தப்பட்ட அந்தத் தொடர்புகள் பதற்றத்தைத் தணிப்பதிலும், பிராந்தி யத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பைக் கொண்டுவர முயற்சிப்பதிலும் பங்களித்தன என்று நான் நினைக்கிறேன்.
எனவே மத்தியஸ்தம் குறித்த சீனாவின் விளக்கம் சரியானது என்பதில் உறுதி யாக இருக்கிறேன். இது மோதலைத் தீர்ப்பதில் மேற்கொள்ளப்பட்ட பல சர்வதேச முயற்சிகளின் சிறப்பம்சமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.